மார்ச் 23: வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்! (கடைசி ஓவர் விடியோ)

மார்ச் 23. வங்கதேச ரசிகர்கள், வீரர்களால் இந்தத் தேதியையும் அன்று நடைபெற்ற டி20 ஆட்டத்தையும் மறக்கவேமுடியாது...
மார்ச் 23: வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்! (கடைசி ஓவர் விடியோ)

மார்ச் 23. வங்கதேச ரசிகர்கள், வீரர்களால் இந்தத் தேதியையும் அன்று நடைபெற்ற டி20 ஆட்டத்தையும் மறக்கவேமுடியாது.

2016-ம் ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது பெங்களூரில் இதே மார்ச் 23 அன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை ஒரு ரன்னில் வீழ்த்தியது. 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய வங்கதேச அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அந்த அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 13 ரன்கள் எடுத்தார்.

கடைசி 3 ஓவர்களில் வங்கதேச அணிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. நெஹ்ரா வீசிய 18-வது ஓவரில் வங்கதேச அணி 10 ரன்கள் எடுத்தது. அதே நேரத்தில் மற்றொரு விக்கெட்டையும் பறிகொடுத்தது. சௌமியா சர்கார் 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றி பெறுவதற்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. பிரதான பந்துவீச்சாளர்கள் அனைவரும் பந்துவீசி முடித்துவிட்ட நிலையில், பந்து பாண்டியா கைக்கு வந்தது.

முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் மஹமுத்துல்லா. இரண்டாவது, மூன்றாவது பந்தை முஷிபுர் ரஹீம் பவுண்டரிக்கு விரட்ட, மைதானமே மயான அமைதியானது. அடுத்த இரு பந்துகளில் முஷிபுர் ரஹ்மானும், மஹமத்துல்லாவும் அவுட்டாக, அனைவவரும் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர்.

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பாண்டியா வீசிய பந்தை அடிக்க தவறினார் ஷுவகதா ஹோம். எனினும் அவர் ரன் எடுக்க ஓடினார். ஒரு கிளவுசடன் தயாராக இருந்த தோனி, மறு முனையிலிருந்து ரஹ்மான் ஓடி வருமுன் ஸ்டம்பை தகர்த்து இந்தியா வெற்றியை உறுதி செய்தார்.

வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பெங்களூரில் கடைசிக்கட்டத்தில் எதிர்பாராதவிதமாக வங்கதேச அணி தோற்றதுபோல சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 போட்டியிலும் தினேஷ் கார்த்திக் கடைசிப் பந்தில் அடித்த சிக்ஸரால் வெற்றியைப் பறிகொடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com