ஊழல் குற்றச்சாட்டு: முகமது ஷமி விடுவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு: முகமது ஷமி விடுவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசியு) மேற்கொண்ட விசாரணையின் முடிவின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதையடுத்து, முகமது ஷமிக்கான ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் விளையாட அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான், காவல்துறையில் குடும்ப வன்முறைப் புகார் அளித்துள்ளார். அதுதொடர்பாக கொல்கத்தா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஷமி-ஹசின் இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவு என்ற குறிப்புடன் ஓர் ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
 அதில், பிரிட்டனைச் சேர்ந்த முகமது பாய் என்ற தொழிலதிபரிடம் இருந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண் மூலமாக முகமது ஷமி ரூ.3 கோடி பெற்றதாக ஹசின் குற்றம்சாட்டியிருந்தார். இதை கருத்தில் கொண்ட வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ), சம்பந்தப்பட்ட பணப்பரிவர்த்தனை குறித்து மட்டும் பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
 அதன்படி விசாரணை மேற்கொண்ட நீரஜ் குமார் தலைமையிலான ஊழல் தடுப்பு அமைப்பு, தனது விசாரணை அறிக்கையை சிஓஏவிடம் சமர்ப்பித்தது.
 அதுதொடர்பாக சிஓஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பு தனது விசாரணை அறிக்கையில், பிசிசிஐ ஊழல் தடுப்பு விதிகளின் கீழ் ஷமி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முகமது ஷமி விடுவிக்கப்படுகிறார். அவருக்கான ஊதிய ஒப்பந்தம் வழங்கவும் அனுமதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
 சிஓஏ அனுமதி அளித்ததை அடுத்து, பிசிசிஐ அவருக்கு "பி' பிரிவு ஒப்பந்தத்தை அளித்துள்ளது. இதன்படி ஷமி ஆண்டுக்கு ரூ.3 கோடி அடிப்படை ஊதியமாகப் பெறுவார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com