மகளிர் முத்தரப்பு டி20: ஆஸி.யிடம் வீழ்ந்தது இந்தியா

மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வியாழக்கிழமை வீழ்ந்தது.
மகளிர் முத்தரப்பு டி20: ஆஸி.யிடம் வீழ்ந்தது இந்தியா

மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வியாழக்கிழமை வீழ்ந்தது.
 சமீபத்தில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணியிடம் முற்றிலுமாக இழந்திருந்த இந்தியா, தற்போது முத்தரப்பு டி20 தொடரையும் அதே அணியிடம் தோல்வி கண்டு தொடங்கியுள்ளது.
 மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வென்றது.
 முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச, பேட் செய்த இந்தியாவில் தொடக்க வீராங்கனை மிதாலி ராஜ் 18 ரன்கள் சேர்த்து வீழ்ந்தார். உடன் வந்த ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 67 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார்.
 எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. கேப்டன் ஹர்மன்பிரீத் கெüர் 13, ஜெமிமா ரோட்ரிகஸ் 1 ரன்னில் வெளியேற, அஞ்சும் பாட்டீல் மட்டும் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்கள் சேர்த்தார்.
 இறுதியாக வேதா கிருஷ்ணமூர்த்தி 15, ஷிகா பாண்டே ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் கார்டனர், பெர்ரி தலா 2 விக்கெட்டுகளும், கிம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.
 பின்னர் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா முதலில் சற்று தடுமாறியது. தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான அலிசா ஹீலி 4, பின்னர் வந்த ஆஷ்லே கார்டனர் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களை ஜுலன் கோஸ்வாமி வெளியேற்றினார்.
 பின்னர், தொடக்க வீராங்கனை பெத் மூனியுடன் இணைந்த எலிஸ் விலானி, விக்கெட் சரிவை தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. பெத் மூனி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, விலானி 39 ரன்களுக்கு வீழ்ந்தார்.
 இறுதியாக கேப்டன் மெக் லேனிங் 35, ரேச்சல் ஹெய்ன்ஸ் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். இந்திய தரப்பில் ஜுலன் கோஸ்வாமி 3, பூனம் யாதவ் ஒரு விக்கெட் சாய்த்தனர்.
 சாதனை சமன்...
 டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா சேஸிங் செய்த ஸ்கோரில் அதிகபட்சம் 153 ஆகும். முன்னதாக கடந்த 2005-இல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு அந்த ரன்களை சேஸ் செய்து ஆஸ்திரேலியா வென்றிருந்தது. தற்போது 2-ஆவது முறையாக அதே ஸ்கோரை சேஸ் செய்து வென்றுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com