17 மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் பயன்பாட்டுக்கு வராத நவீன உடற்பயிற்சிக் கூடம்

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் 17 மாவட்ட விளையாட்டு அரங்குகளில் ஓராண்டுக்கு முன் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடங்களை
17 மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் பயன்பாட்டுக்கு வராத நவீன உடற்பயிற்சிக் கூடம்

திண்டுக்கல்: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் 17 மாவட்ட விளையாட்டு அரங்குகளில் ஓராண்டுக்கு முன் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடங்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலகத்துடன் கூடிய விளையாட்டு அரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு விளையாட்டுகளுக்கான திறந்தவெளி களம் அமைக்கப்பட்டுள்ளதோடு, சில மாவட்டங்களில் உள்விளையாட்டு அரங்கங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், விளையாட்டு ஆர்வலர்களுக்கு முக்கிய தகுதியாக இருக்க வேண்டிய உடல் தகுதியை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள 17 மாவட்ட விளையாட்டு அரங்குகளில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சேலம், நீலகிரி, தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 17 மாவட்ட விளையாட்டு அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடங்களுக்கு நவீன உபகரணங்கள் (இயந்திரங்கள்) வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சி கூடத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு மட்டும் ரூ.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 இந்த நவீன உடற்பயிற்சிக் கூடத்தை பயன்படுத்துவோருக்கான கட்டணம் பள்ளி மாணவர்களுக்கு மாதத்துக்கு ரூ.250, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.300, பொதுமக்களுக்கு ரூ.500 வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தந்த மாவட்டங்களில் பயன்படுத்த தயாராக உள்ள இந்த நவீன உடற் பயிற்சி உபகரணங்கள், கடந்த ஓராண்டாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதனால், அங்கு உடற்பயிற்சிக்காக செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், நவீன உபகரணங்கள் காட்சிப் பொருளாகவே இருந்து வருகின்றன.
 இதுகுறித்து தனியார் கல்லூரி விளையாட்டு பயிற்சியாளர் விஜய் கூறுகையில், "தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடங்களில் குறைந்தபட்சமாக ரூ.1000 மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில், மாவட்ட விளையாட்டு அரங்கில் குறைந்த செலவில் 10-க்கும் மேற்பட்ட நவீன உபகரணங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ள போதிலும், அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பல லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ள இந்த நவீன உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தால், பழுதடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த நவீன உடற்பயிற்சி உபகரணங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என்றார்.
 உடற்பயிற்சி கூடத்தில் உள்ள நவீன உபகரணங்கள்
 புஷ் அப்ஸ், புல்லப்ஸ், ஹாப் ஸ்கோட், ட்ரட் மில், பேக் பிரஸ், ஃப்ரண்ட் பிரஸ், பென்ச் பிரஸ், லெக் ட்ரண்ட், டம்புள்ஸ், வெயிட் லிப்டிங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com