இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் கோலி: புஜாரா, அஸ்வின், இஷாந்தும் பங்கேற்பு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி (மாகாணங்களுக்கு இடையேயான போட்டி) கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் கோலி: புஜாரா, அஸ்வின், இஷாந்தும் பங்கேற்பு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி (மாகாணங்களுக்கு இடையேயான போட்டி) கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளார். அவரோடு புஜாரா, அஸ்வின், இஷாந்த் ஆகியோரும் அந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
 எதிர்வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மோதவுள்ள நிலையில், அதற்குத் தயாராகும் வகையில் கோலி உள்ளிட்டோர் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கோலி, லண்டனைச் சார்ந்த சர்ரே அணிக்காக களம் காண வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சேதேஷ்வர் புஜாரா- யோர்க்ஷைர் அணிக்காகவும், ரவிச்சந்திரன் அஸ்வின்-வார்விக்ஷைர் அணிக்காகவும், இஷாந்த் சர்மா-சஸ்ùஸக்ஸ் அணிக்காவும் விளையாடவுள்ளனர்.
 இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறியதாவது:
 எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகவும் வகையில் கோலி, சேதேஷ்வர் புஜாரா, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் ஆகியோர் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 வரும் ஜூன் 14 முதல் 18 வரையில் பெங்களூரில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் கோலி பங்கேற்க மாட்டார்.
 அஜிங்க்ய ரஹானே அல்லது ரோஹித் சர்மா அந்தப் போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்துவர்.
 தென் ஆப்பிரிக்க தொடரை அடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்தியா தன்னை தயார்படுத்திக் கொள்ள அதிக அவகாசம் தேவைப்படும் என கருதினோம்.
 எனவே, வீரர்களுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கவுன்டி கிரிக்கெட்டில் இந்தியாவின் பிரதான வீரர்கள் பங்கேற்க, அங்குள்ள அணிகளுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று வினோத் ராய் கூறினார்.
 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து புறப்படும் கோலி, கவுன்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக முதலில் ஹாம்ப்ஷைர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் (ஜூன் 9-12) விளையாடுவார். அதையடுத்து சாமர்செட் அணிக்கு எதிராக (ஜூன் 20-23 தேதிகளில் ) மோதுகிறார்.
 3-ஆவது மற்றும் இறுதி ஆட்டத்தில் யார்க்ஷைர் அணிக்கு எதிராக (ஜூன் 25) விளையாடுகிறார். இந்த அணியில் புஜாரா இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
 இந்திய "ஏ' அணியில் டெஸ்ட் வீரர்கள்
 இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய், அஜிங்க்ய ரஹானே உள்ளிட்டோர், ராகுல் திராவிட் பயிற்சியிலான இந்திய "ஏ' அணியில் பங்கேற்று இங்கிலாந்து செல்கின்றனர்.
 இங்கிலாந்து கவுன்டி அணிகள் மற்றும் அந்நாட்டு ஏ அணி (இங்கிலாந்து லயன்ஸ்) ஆகியவற்றுடனான முதல்தர கிரிக்கெட்டில் அவர்கள் அடங்கிய இந்திய ஏ அணி மோதவுள்ளது.
 இதுகுறித்து வினோத் ராய் கூறியதாவது:
 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராவது குறித்து, கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஏ அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட், கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான மேலாளர் சபா கரிம், தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
 அதன் ஒரு பகுதியாக, மூத்த டெஸ்ட் வீரர்களில் 2 முதல் 4 பேர் இந்திய ஏ அணியுடன் ஜூன் மாத தொடக்கத்தில் இங்கிலாந்து செல்கின்றனர். மேலும் சில டெஸ்ட் வீரர்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து செல்ல உள்ளனர். மொத்தமாக 7 முதல் 8 டெஸ்ட் வீரர்கள் இங்கிலாந்தில் விளையாடவுள்ளனர்.
 இந்திய அணி ஜூலை மாதத்தில் ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடுகிறது. எனவே, ஆகஸ்டில் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்டுக்கு தயாராகும் வகையில், அந்நாட்டில் சிகப்பு நிற பந்தில் கிரிக்கெட் விளையாடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று வினோத் ராய் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com