மியாமி ஓபன்: ஜோகோவிச்சை வெளியேற்றினார் பெனாய்ட் பேர்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது முதல் சுற்றில் பிரான்ஸின் பெனாய்ட் பேரிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து
மியாமி ஓபன்: ஜோகோவிச்சை வெளியேற்றினார் பெனாய்ட் பேர்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது முதல் சுற்றில் பிரான்ஸின் பெனாய்ட் பேரிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
 ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருந்த ஜோகோவிச்சை எதிர்கொண்ட பெனாய்ட், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
 முழங்கை காயம் காரணமாக 6 மாதம் போட்டியில் பங்கேற்காமல் இருந்த ஜோகோவிச், அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய ஓபன், இன்டியன் வெல்ஸ், மியாமி ஓபன் ஆகியவற்றில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளார்.
 தோல்வி குறித்து அவர் கூறுகையில், "சிறப்பாக ஆடவே முயற்சிக்கிறேன். ஆனால் ஏன் இயலவில்லை எனத் தெரியவில்லை. இவ்வாறு நான் விளையாடுவதை நானே விரும்பவில்லை. என்னால் முடிந்த வரையில் முயற்சித்து விளையாடவே விரும்புகிறேன். இந்த ஆட்டத்தை நன்றாகவே தொடங்கினேன். முதல் ஆறு கேம்கள் சிறப்பானதாக இருந்தது.
 எனினும் எனது ஆற்றல் குறைந்தது. பெனாய்ட் மிகச் சிறப்பாக சர்வ் செய்தார். என்னால் அவரை முறியடிக்க முடியவில்லை. சரியானே நேரத்தில் மிகச் சிறப்பான ஷாட்களை அவர் அடித்தார். அனைத்தும் விரைவாகவே முடிந்துவிட்டன' என்றார்.
 டெல் போட்ரோ வெற்றி: இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ 6-4, 5-7, 6-2 என்ற செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹாஸியை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். சமீபத்தில் டெல் போட்ரோ, உலகின் முதல் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி இன்டியன் வெல்ஸ் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
 3-ஆவது சுற்றில் ராபின், போட்டித் தரவரிசையில் 26-ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொள்கிறார். முன்னதாக நிஷிகோரி 7-6(7/4), 4-6, 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை தோற்கடித்தார்.
 வோஸ்னியாக்கி தோல்வி
 மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்.
 உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் வோஸ்னியாக்கி, பியுர்டோ ரிகோவின் மோனிகா பிக்கிடம் 6-0, 4-6, 4-6 என்ற செட்களில் தோல்வி கண்டார். போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற செட்களில் ரஷியாவின் நடாலியா விக்லியான்ட்சேவாவை வீழ்த்தினார்.
 சமீபத்தில் நிறைவடைந்த இன்டியன் வெல்ஸ் டென்னிஸில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினா, இப்போட்டியில் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com