ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஸ்மித், வார்னருக்குத் தடை! பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ள ஸ்மித், வார்னர் ஆகிய இருவரும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது...
ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஸ்மித், வார்னருக்குத் தடை! பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு!

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸி. கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட் ஆகியோருக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ள ஸ்மித், வார்னர் ஆகிய இருவரும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

கடந்த 1-ம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த முயன்றது விடியோவில் பதிவாகியது. இது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் உதவியுடன் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பேன்கிராஃப்டும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன், அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னரும் விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்பட அந்நாட்டில் பல்வேறு தரப்புகளிலிருந்து இவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்தது. அந்நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளும் அவர்களை கடுமையாக சாடி முதல் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டன. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஸ்மித், வார்னர், பேன்கிராப்ட் ஆகிய மூவரும் உடனடியாகத் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி தாயகம் திரும்பவேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் நேற்று அறிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் இன்று ஸ்மித், வார்னர், பேன்கிராஃப்ட் ஆகிய மூவரும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவுள்ளார்கள்.

இதையடுத்து ரென்ஷாவுடன் சேர்த்து கிளென் மேக்ஸ்வெல், ஜோ பர்ன்ஸ் ஆகிய 3 வீரர்கள் ஆஸி. அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மூன்றாவது டெஸ்டின் கடைசி நாளன்று ஆஸி. அணியின் கேப்டனாகச் செயல்பட்ட டிம் பெயின், கடைசி டெஸ்டிலும் கேப்டனாகச் செயல்படுவார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46-வது கேப்டனாகியுள்ளார் பெயின்.

இந்நிலையில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸி. கேப்டன் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடமும் பேன்கிராஃப்டுக்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் மூவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாகச் செயல்பட ஸ்மித், பேன்கிராஃப்ட் ஆகியோருக்கு இரு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தைச்  சேதப்படுத்திய விவகாரத்தில் முக்கியப் பங்கு வகித்த டேவிட் வார்னருக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகச் செயல்பட இனி ஒருபோதும் வாய்ப்பளிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இது கடுமையான தண்டனை எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

இதன் அடுத்தக்கட்டமாக ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளின் கேப்டன்களாகத் தேர்வான ஸ்மித், வார்னர் ஆகிய இருவரும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் பங்குபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பிசிசிஐ-யின் நிர்வாகக் குழுவும் பிசிசிஐ மற்றும் ஐபிஎல்-ன் தலைமை அதிகாரிகளும் எடுத்த முடிவின்படி இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களைத் தேர்வு செய்ய இரு அணிகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல்-லில் பங்குபெறும் வீரர்கள் விதிமுறைகளின்படி செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி, வெள்ளியன்று ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கவுள்ளது. டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com