என் தலைமை தோல்வி அடைந்துள்ளது: செய்தியாளர் சந்திப்பில் உடைந்து அழுத ஸ்மித்! (விடியோ)

என் தலைமை தோல்வியடைந்துள்ளது. இதனால் உண்டான இழப்புகளுக்கு இனி நான் என்ன செய்யவேண்டுமானாலும் தயாராக உள்ளேன்...
என் தலைமை தோல்வி அடைந்துள்ளது: செய்தியாளர் சந்திப்பில் உடைந்து அழுத ஸ்மித்! (விடியோ)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் மீது ஆஸ்திரேலிய தலைமை கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி, கேப்டனாக இருந்த ஸ்மித், துணை கேப்டனாக இருந்த வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. பான்கிராஃப்ட், 9 மாதங்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளார். இந்த தடையை எதிர்த்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிடம் மேல்முறையீடு செய்ய 3 வீரர்களுக்கும் ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை தடை விதித்தது.

ஆஸ்திரேலியா திரும்பியுள்ள ஸ்மித், சிட்னியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பேட்டியின்போது பலமுறை அவர் உடைந்து அழுதார்.

ஸ்மித் பேசியதாவது:

என் அணி வீரர்களுக்கும் உலகெங்குமுள்ள ரசிகர்களுக்கும் ஏமாற்றமடைந்துள்ள ஆஸ்திரேலிய மக்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது - என்னை மன்னியுங்கள். 

நடந்த சம்பவங்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என் தலைமை தோல்வியடைந்துள்ளது. இதனால் உண்டான இழப்புகளுக்கு இனி நான் என்ன செய்யவேண்டுமானாலும் தயாராக உள்ளேன்.  

நடந்த சம்பவங்கள் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளன. மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். கிரிக்கெட்டை மிகவும் விரும்புகிறேன். சிறுவர்களைக் கொண்டாட்ட மனநிலையில் வைத்துக்கொள்ள மிகவும் விரும்புவேன். ஆஸ்திரேலியாவுக்கும் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வலியைத் தந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

நான் யார் மீது பழி போட விரும்பவில்லை. நான் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன். என் கண்காணிப்பில்தான் அணி இருந்தது. கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 

உலகின் மிகச்சிறந்த விளையாட்டு, கிரிக்கெட். அதுதான் என் வாழ்க்கை. மீண்டும் அது அப்படித்தான் இருக்கும் என நம்புகிறேன். என்னை மன்னியுங்கள், நான் நொறுங்கிப் போயுள்ளேன். 

கேள்விக்குரிய முடிவை எடுக்க நினைக்கும்போது, அதனால் யார் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணவேண்டும். நீங்கள் உங்கள் பெற்றோருக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறீர்கள்.

இதிலிருந்து ஒரு நல்லது உருவானால், இதிலிருந்து அடுத்தவர்கள் ஒரு பாடம் கற்றுக்கொண்டால், அதற்கு நானொரு காரணமாக இருப்பேன் என நம்புகிறேன். என் வாழ்நாள் முழுக்க என் செயலுக்காக வருந்துவேன். இனிவரும் காலங்களில் மரியாதையைப் பெறுவேன், என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com