கிரிக்கெட் சங்கத்தை எதிர்த்ததால் ஸ்மித், வார்னருக்குக் கடுமையான தண்டனையா?: கேள்வி எழுப்பும் கம்பீர்!

கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு எதிராகச் செயல்பட்டதால் அதற்குரிய தண்டனையை ஸ்மித்தும் வார்னரும் அனுபவிக்கிறார்களா என்று...
கிரிக்கெட் சங்கத்தை எதிர்த்ததால் ஸ்மித், வார்னருக்குக் கடுமையான தண்டனையா?: கேள்வி எழுப்பும் கம்பீர்!

கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு எதிராகச் செயல்பட்டதால் அதற்குரிய தண்டனையை ஸ்மித்தும் வார்னரும் அனுபவிக்கிறார்களா என்று பிரபல வீரர் கெளதம் கம்பீர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஊழல் இல்லாத சூழலே கிரிக்கெட்டுக்குத் தேவை. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் மிகவும் கடுமையானவை. ஊதிய உயர்வுக்காகக் குரல் எழுப்பியதற்கான தண்டனையை ஸ்மித்தும் வார்னரும் அனுபவிக்கிறார்களா? வீரர்களின் நலனுக்காகக் குரல் எழுப்பியவர்களை நிர்வாகிகள் கேவலப்படுத்திய வரலாறுகள் உண்டு. சிறந்த உதாரணம் -  இயன் சாப்பல். நான் உணர்வுபூர்வாகச் சொல்லலாம். ஆனால் ஸ்மித் ஓர் ஏமாற்றுக்காரராக எனக்குத் தெரியவில்லை. தன்னுடைய நாட்டின் வெற்றிக்காக அவர் சிரமப்பட்டு முயன்றுள்ளார். அதற்கான வழிமுறைகள் கேள்விக்குரியவை. அதற்காக அவரை ஊழல்வாதி என முத்திரை குத்த வேண்டாம். ஸ்மித்தின் தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது. ஊடகமும் ஆஸ்திரேலிய மக்களும் சுலபமான இலக்கான அவர்களை விமரிசிக்க மாட்டார்கள் என எண்ணுகிறோம். தண்டனையை விடவும் ஏமாற்றுக்காரர் என்கிற முத்திரையுடன் வாழ்வது பெரிய தண்டனை என்று எழுதியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி வசமானது. கடந்த 22-ம் தேதி தொடங்கிய 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தின்போது சொரசொரப்பு தன்மைகொண்ட ஒரு பொருளைக் கொண்டு பந்தை சேதப்படுத்த பான்கிராஃப்ட் முயன்றது கேமராவில் பதிவாகி மைதானத்தில் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த திரையில் ஒளிபரப்பானது. இதையடுத்து, அந்தப் பொருளை பார்கிராப்ட் தனது உடையில் மறைக்க முயன்றார். பின்னர், இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பான்கிராஃப்டும் ஒப்புக் கொண்டனர்.

அத்துடன், கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பொறுப்பிலிருந்து முறையே ஸ்மித் மற்றும் வார்னர் விலகுவதாக அறிவித்தனர். கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வலியுறுத்தினார். இதை விசாரித்து வந்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம், ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு 9 மாத காலமும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எஞ்சியுள்ள ஒரு டெஸ்ட் ஆட்டம் முடிவடைந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகி விடுவேன் என்று கலங்கிய கண்களுடன் டேரன் லேமன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முன்னணி ஸ்பான்சர்ஷிப் நிறுவனமான மெக்கெல்லன், தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடருக்கும் மாகெல்லன் நிறுவனம்தான் கடந்த ஆண்டில் ஸ்பான்சர் செய்தது. அதேநேரத்தில், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகிய வீரர்களுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை 'ஆஸிக்ஸ்' நிறுவனம் முடித்துக் கொண்டது.பந்தின் தன்மையை மாற்ற முயன்றதால் இந்த நடவடிக்கையை இந்த நிறுவனங்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com