ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஜஸ்டின் லாங்கர் (வயது 47), அந்த அணியின் புதிய பயிற்சியாளராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து ரக போட்டிகளுக்கும் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்த 4 ஆண்டுகள் பயிற்சியாளராக பணியாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மே 22-ஆம் தேதி முதல் தொடங்கும் இவரது பணியின் கீழ் ஆஸ்திரேலிய அணி 2 ஆஷஸ் தொடர், 50 ஓவர் உலகக் கோப்பை தொடர், 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றில் பங்கேற்கவுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜேம்ஸ் சதர்லாண்ட் கூறுகையில், சமீபகாலங்களில் வீரர்களின் முன்னேற்றம் மற்றும் பயிற்சியாளர் பணிகளில் ஜஸ்டின் லாங்கர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவரை ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளோம் என்றார்.

பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது:

ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களுடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். ஆஸ்திரேலிய அணிக்கு வரும் காலங்களில் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. ரசிகர்களின் வரவேற்புடன் அதை வெற்றியுடன் எதிர்கொண்டு அனைத்து ரக கிரிக்கெட்டிலும் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவோம். ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் நிச்சயம் அனைவரும் பெருமைப்படும்படி விளையாடுவார்கள் என்றார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள ஜஸ்டின் லாங்கர் 7,696 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 23 சதங்கள் அடங்கும். கடந்த 2012, நவம்பர் முதல் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் டி20 அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அதுபோல அவ்வப்போது ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com