பிசிசிஐயின் கோரிக்கை ஏற்பு: அடிலெய்டு டெஸ்ட் பகலிரவாக நடத்தப்படாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

பிசிசிஐயின் முடிவை ஏற்றுக்கொண்டு அடிலெய்டு டெஸ்ட் போட்டி பகலிரவாக நடத்தப்படாது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா... 
பிசிசிஐயின் கோரிக்கை ஏற்பு: அடிலெய்டு டெஸ்ட் பகலிரவாக நடத்தப்படாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

வரும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒரு நாள், டி 20 போட்டிகளில் இந்தியா பங்கேற்று விளையாடுகிறது.

டிசம்பர் முதல் வாரத்தில் அடிலெய்ட் நகரில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த ஆஸி கிரிக்கெட் அமைப்பு முடிவு செய்தது. இதில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ மறுத்தது. டெஸ்ட் தொடரில் வெல்வதற்காக இந்தியா பகலிரவு போட்டியில் பங்கேற்க மறுக்கிறது என சிஏ அமைப்பு சார்பில் புகார் கூறப்பட்டது. பிசிசிஐ நிர்வாகிகள் குழுவின் தலைமை நிர்வாகி வினோத் ராயும் பகலிரவு டெஸ்டில் இந்தியா பங்கேற்க வாய்ப்பில்லை என முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதை உறுதி செய்து சிஏ அமைப்புக்கு பிசிசிஐ கடிதம் எழுதியது. பகலிரவு டெஸ்ட் போட்டிக்குத் தயாராக 18 மாதங்கள் தேவைப்படும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பிசிசிஐக்குத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் (பொறுப்பு) செளத்ரி சிஏ அமைப்பு தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்டுக்கு மின்னஞ்சல் அனுப்பினார் பகலிரவு போட்டிக்குத் தயாராகக் குறைந்தது ஓராண்டாகும். எனவே ஆஸியில் நடத்தப்படும் அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் வழக்கமான முறையில் நடத்த வேண்டும் என அதில் தெரிவித்தார். 

இந்நிலையில் பிசிசிஐயின் முடிவை ஏற்றுக்கொண்டு அடிலெய்டு டெஸ்ட் போட்டி பகலிரவாக நடத்தப்படாது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. 2014-க்குப் பிறகு முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியாக இல்லாமல் வழக்கமான முறையில் அடிலெடில் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. 

பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பிசிசிஐ தயாராக இல்லை என்பதால் வழக்கமான முறையில் அடிலெய்டு டெஸ்ட் போட்டி நடக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு சம்மரிலும் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த விருப்பப்படுகிறோம். எனினும் பிசிசிஐயின் விருப்பத்தின் பேரில் இந்தமுறை அதுபோல நடத்தமுடியவில்லை. எனினும் ஜனவரியில் காபா-வில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தவுள்ளோம். ஜூலை 2019 முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ளது. அதில் டெஸ்ட் தொடரை நடத்தவுள்ள நாட்டுக்கு பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தும் அதிகாரம் வழங்கப்படும் என எண்ணுகிறோம் என்று கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் இதுவரை நடைபெற்ற 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com