ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி தோல்வி

மகளிர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வியடைந்தது. 
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி தோல்வி

5-ஆவது மகளிர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் தென் கொரியாவில் நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இதையடுத்து, இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தொடரை நடத்தும் தென் கொரியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இரு அணிகளாலும் முதல் கால்பகுதி ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை. 

ஆனால், 2வது கால்பகுதி ஆட்டத்தில் தென் கொரிய அணி இந்தியாவுக்கு நெருக்கடி தந்தது. 2 நிமிட இடைவெளியில் 3 பெனால்டியை பெற்ற தென் கொரியா பெற்றதால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், தென் கொரிய அணியால் அதனை கோலாக மாற்ற முடியவில்லை.    

பின்னர், 24வது நிமிடத்தில் தென் கொரிய வீராங்கனை யங்ஸில் லீ போட்டியின் முதல் கோலை அடித்து அசத்தினார். அதன்பிறகு முதல் பாதி ஆட்டம் முடியும் வரை இந்திய வீராங்கனைகள் திணறினர்.       

அதன்பிறகு 2வது பாதி ஆட்டத்திலும் இந்திய வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை. மாறாக தென் கொரிய அணிக்கு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தது. இருப்பினும், இந்திய கோல் கீப்பர் சவிதா அதை கோலாக மாற்றவிடவில்லை. 

போட்டியின் முடிவு நேரத்தில் 1 கோல் அடித்து சமன் செய்யலாம் என்று எண்ணிய இந்திய வீராங்கனைகளின் முடிவும் தோல்வியில் முடிந்தது. இதன்மூலம், தென் கொரிய 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை 3-ஆவதாக கைப்பற்றியது. 

முன்னதாக, தென் கொரிய அணி 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இந்திய அணி 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2வது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது.  

சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை வந்தனா கடாரியா தொடர் நாயகி விருதை தட்டிச் சென்றார். இளம் வீராங்கனை லால்ரெஸ்மியாமி வளரும் வீராங்கனை விருதை தட்டிச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com