இறுதிச் சுற்றில் சென்னை: 2 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி திரில் வெற்றி

ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் டுபிளெஸிஸ் அதிரடியாக ஆடி 67 ரன்களை எடுத்தார
டுபிளெஸிஸை மகிழ்ச்சியில் ஆரத்தழுவும் சென்னை வீரர்கள்.
டுபிளெஸிஸை மகிழ்ச்சியில் ஆரத்தழுவும் சென்னை வீரர்கள்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் டுபிளெஸிஸ் அதிரடியாக ஆடி 67 ரன்களை எடுத்தார்.

முதலில் ஆடிய ஹைதராபாத் அணி மிகவும் திணறி 7 விக்கெட்டை இழந்து 139 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கார்லோஸ் சிறப்பாக ஆடி 43 ரன்களை குவித்தார். ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்று முதலாவது தகுதிப் போட்டி மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதன் முதல் தகுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை பீல்டிங்கை தேர்வு செய்தது.

துவக்கமே ஹைதராபாதுக்கு அதிர்ச்சி

ஹைதராபாத் அணி சார்பில் ஷிகர் தவன், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் துவக்கமே ஹைதராபாத்துக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தவன் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே சஹார் பந்தில் போல்டானார். 12 ரன்களில் கோஸ்வாமியும், 24 ரன்களுடன் கேப்டன் வில்லியம்ஸனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பிரோவா 2 விக்கெட்

ஷகிப் அல் ஹசன் 12 , மணிஷ் பாண்டே 8, பதான் 24, புவனேஸ்வர் குமார் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கார்லேஸ் பிராத்வெயிட் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 
20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 139 ரன்களையே எடுத்தது. சென்னை தரப்பில் பிராவோ 2 விக்கெட்டையும், சஹார், கிடி, தாகுர், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ரன் ஏதுமின்றி வாட்சன் அவுட்

140 ரன்கள் எடுத்தால் வென்ற என்ற இலக்குடன் சென்னை அணி சார்பில் வாட்சன்-டுபிளெஸிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதலாவது ஓவரிலேயே புவனேஸ்வர் குமாரின் அபாரமான பந்துவீச்சால் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட் கீப்பர் கோஸ்வாமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 1 ரன்னையே சென்னை எடுத்தது.

சித்தார்த் கெளல் அபாரம்

டுபிளெஸிஸ் உடன் இணை சேர்ந்த ரெய்னா சந்தீப் சர்மாவின் ஓவரில் தொடர்ந்து ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். எனினும் அவர் 4 பவுண்டரியுடன் 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த போது சித்தார்த் கெüல் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

பின்னர் வந்த அம்பட்டி ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே கெüல் பந்தில் போல்டானார். அப்போது 3.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு சென்னை 24 ரன்களை எடுத்திருந்தது. 

சென்னை திணறல் 80/6

தோனி-டுபிளெஸிஸ் ஆகியோர் நிதானமாக ஆடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். கேப்டன் தோனி 9 ரன்கள் எடுத்திருந்த போது ரஷீத்கான் பந்துவீச்சில் போல்டானார். பிராவோ 7 ரன்களுக்கு ரஷீத் கான் பந்துவீச்சில் தவனிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். 

பின்னர் ஆட வந்த ரவீந்திர ஜடேஜாவும் நிலைக்கவில்லை. 3 ரன்கள் எடுத்த அவர் சந்தீப் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 14 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு சென்னை 80 ரன்களை எடுத்து திணறிக் கொண்டிருந்தது. 
ஹர்பஜன் சிங் 2, சஹார் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். 18 மற்றும் 19-வது ஓவரில் முறையே 20, 17 ரன்களை சென்னை எடுத்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 67 ரன்களுடன் டுபிளெஸிஸýம், 15 ரன்களுடன் தாகுரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 140 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டுபிளெஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஹைதராபாத் தரப்பில் சந்தீப், கெüல், ரஷீத் கான் தலா 2 விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் சென்னை அணி ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த சீசனில் தொடர்ந்து 3-வது முறையாக சென்னையிடம் தோல்வியை தழுவியது ஹைதராபாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com