'ஏபி டி வில்லியர்ஸ்' சர்வதேச கிரிக்கெட்டில் கடந்து வந்த பாதை!

'ஏபி டி வில்லியர்ஸ்' சர்வதேச கிரிக்கெட்டில் கடந்து வந்த பாதை!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் (வயது 34) புதன்கிழமை அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் (வயது 34) புதன்கிழமை அறிவித்தார். திடீரென சமூக வலைதளத்தில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், நான் சோர்வாக உள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பிறகு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க இதுவே சரியான தருணம். இது மிகவும் கடினமான முடிவாகும் என்றார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அறிமுக டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 28 மற்றும் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

முதல் 4 டெஸ்டுகளிலும் பெரிதாக சோபிக்கத் தவறிய நிலையில், 5-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இருப்பினும் 2-ஆவது இன்னிங்ஸில் சுதாரித்து ஆடி சதமடித்தார். இதுவே அவரது முதல் டெஸ்ட் சதமாகும்.

ஒருநாள் போட்டிகளிலும் துவக்க காலங்களில் பெரிதாக ஜொலிக்வில்லை. அறிமுகப் போட்டியில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 17-ஆவது போட்டியில் தான் முதல் அரைசதம் கடந்தார்.

பின்னர் 2007 உலகக் கோப்பையில் முதல் ஒருநாள் சதமடித்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அந்தப் போட்டியில் 146 ரன்கள் குவித்தார்.

டெஸ்ட் அரங்கில் அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதல் இரட்டைச் சதமடித்தார். ஒரு இன்னிங்ஸில் மொத்தம் 217 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தார். 

அதுபோல 2008-ல் பெர்த் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 414 ரன்கள் என்ற கடின வெற்றி இலக்கை தென் ஆப்பிரிக்க அணி எளிதாகக் கடந்தது. இதன் முக்கிய காரணமாக டி வில்லியர்ஸ் விளங்கினார். 2-ஆவது இன்னிங்ஸில் 106 ரன்களுடன் களத்தில் இறுதிவரை களத்தில் நின்றார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 2-ஆவது மிகப்பெரிய இலக்கை வென்ற அணி என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா பெற்றது. 

2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முறையாக தொடர்ந்து இரு ஒருநாள் போட்டிகளில் சதமடித்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 107 மற்றும் லாஹூரில் 103 ரன்கள் குவித்தார். பின்னர் இதுபோன்று தொடர்ந்து இரு ஒருநாள் போட்டிகளில் 5 முறை சதமடித்து அசத்தியுள்ளார்.

2010-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஹாட்ரிக் சதம் அடித்து அரிய பட்டியலில் இடம்பிடித்த டி வில்லியர்ஸ், மெல்ல கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடிக்கத் தொடங்கினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அபு தாபியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 278 ரன்கள் குவித்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க வீரரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும் அது அமைந்தது. பின்னாளில் ஹசிம் ஆம்லா இந்த சாதனையை முறியடித்தார்.

முதலில் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பராக களமிறங்கிய டி வில்லியர்ஸ், பின்னாளில் பேட்டிங்கில் சாதனைகள் பல படைத்தார். 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தென் ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் விக்கெட் கீப்பிங்கில் இருந்து விலகி பேட்ஸ்மேனாகத் தொடர்ந்தார்.

2012-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார். முதலில் 220 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்து நங்கூரமாய் நின்று ஒரு போட்டியை டிரா செய்தார். அடுத்து 184 பந்துகளில் 169 ரன்கள் விளாசி வெற்றிபெற வைத்தார்.

2013-ஆம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் அரிய சாதனைப் படைத்தார். சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) வெளியிட்ட தரவரிசையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். 

ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் அதிவேகமாக சதம் விளாசிய ஒரே வருடத்தில் அந்த சாதனையை முறியடித்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 31 பந்துகளில் சதம் விளாசி, அதிவேக சதமடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

ஒரு மாத இடைவேளையில் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை விரட்டி மற்றொரு மகத்தான சாதனையும் படைத்தார். 2015 உலகக் கோப்பையில் 66 பந்துகளில் 162 ரன்கள் நொருக்கினார். இதன்மூலம் அதிவேகமாக 150 ரன்கள் குவித்தவர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

ஆனால், அதிர்ஷ்டம் நிலைக்கவில்லை. 2015-ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி, நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியுடன் வெளியேறியது. இதனால் மனமுடைந்த அந்த அணி வீரர்கள் (டி வில்லியர்ஸ் உட்பட) மைதானத்திலேயே கண்ணீர் விட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியதன் மூலம் பெங்களூரு நகரம் அவருக்கு இரண்டாவது தாய் வீடானது. அதே சின்னசாமி மைதானத்தில் 2015-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தனது 100-ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். மழையால் பாதிக்கப்பட்ட அந்த ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்திருந்தார். 

2015-16 சீசனில் கடைசியாக தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பும் டி வில்லியர்ஸ் வசம் வந்தடைந்தது. ஆனால் தொடர்ச்சியாக ஏற்பட்ட காயங்களின் காரணமாக அதில் நீடிக்கவில்லை.

அதே ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் போது டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அச்சமயம் டெஸ்ட் அணியில் அவருக்கான இடமும் கேள்விக்குரியானது.

2017-ல் மற்றொரு பெரிய சறுக்கல் தென் ஆப்பிரிக்க அணிக்கு காத்திருந்தது. அந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இருந்து தகுதிச் சுற்று ஆட்டங்களுடன் வெளியேறியது.

இந்நிலையில், 2017-18 சீசனில் தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற தொடர்களில் அணிக்கு மீண்டும் திரும்பினார் டி வில்லியர்ஸ். அப்போது ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார்.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இன்னும் 12 மாத இடைவெளி மட்டுமே உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 20,014 ரன்கள் குவித்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 8,765 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 9,577 ரன்களும், டி20 போட்டிகளில் 1,672 ரன்களும் அடங்கும்.

தலைசிறந்த சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் டி வில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை 2014 மற்றும் 2015 ஆகிய இரண்டு முறை கைப்பற்றியுள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் (16 பந்துகளில்), அதிவேக சதம் (31 பந்துகளில்), அதிவேக 150 ரன்கள் (64 பந்துகளில்), டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியின் 2-ஆவது அதிகபட்ச ஸ்கோர் (278*) உள்ளிட்ட சாதனைகளைப் படைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com