பிளே ஆஃப் 2-ஆவது தகுதி ஆட்டம்: இறுதிச் சுற்றில் ஹைதராபாத்

கொல்கத்தா அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஹைதராபாத் ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் நுழைந்தது.
பிளே ஆஃப் 2-ஆவது தகுதி ஆட்டம்: இறுதிச் சுற்றில் ஹைதராபாத்

கொல்கத்தா அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஹைதராபாத் ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் நுழைந்தது. ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கான ஐபிஎல் பிளே ஆஃப் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ரித்திமான் சாஹா, ஷிகர் தவன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களை ஹைதராபாத் எடுத்திருந்தது.
இந்நிலையில் 7.1 ஓவரின் போது 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்திருந்த தவன், குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அப்போது ஹைதராபாத் 56 ரன்களை எடுத்திருந்தது.
வில்லியம்ஸன் அதிர்ச்சி: பின்னர் ஆட வந்த கேப்டன் கேன் வில்லியம்ஸன் 3 ரன்களுக்கு குல்தீப் யாதவின் பந்துவீச்சில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இதனால் அவரை மலைபோல் நம்பியிருந்த ஹைதராபாத் அணியினர் அதிர்ச்சிக்கு ஆளாகினர். ரித்திமான் சாஹாவும் 35 ரன்களுக்கு சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது 10.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களையே ஹைதராபாத் எடுத்திருந்தது.
நிதானமாக ஆடிய ஷகிப் அல் ஹசன் 28 ரன்களுடன் குல்தீப் யாதவால் ரன் அவுட் செய்யப்பட்டார். தீபக் ஹூடா 19. கார்லோஸ் பிராத்வெயிட் 8, யூசுப் பதான் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். புவனேஸ்வர் குமார் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதி ஓவரில் ரஷீத் 24 ரன்களை குவித்தார்.
20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 174 ரன்களை எடுத்தது. கொல்கத்தா தரப்பில் குல்தீப் 2 விக்கெட்டையும், மவி, நரைன், சாவ்லா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கொல்கத்தா சரிவு: 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தாவின் கிறிஸ் லீன், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டம் மேற்கொண்டதில் 4 ஓவர்களிலேயே 40 ரன்களை கொல்கத்தா எட்டியது. எனினும் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 26 ரன்களை சேர்த்த நரைன், கெளல் பந்தில் ஆட்டமிழந்தார். 
கிறிஸ் லீன்-ராணா இணை அதிரடியாக ஆடியதில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆனால் ரஷீத் கான் அபார பந்துவீச்சால் கொல்கத்தா நிலைகுலைந்தது ராணா 22 ரன்களுடன் சாஹா, ரஷீத்தால் ரன் அவுட் செய்யப்பட்டார். உத்தப்பா 2 ரன்களில் ரஷீத் கான் பந்தில் போல்டானார். 10.1 ஓவர்களில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 8 ரன்களுடன் ஷகிப் பந்தில் போல்டானார். 2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 48 ரன்களை குவித்த லீன், ரஷீத்கான் பந்தில் எல்பிடபிள்யு ஆனார்.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய ரஸ்ஸலை வெறும் 3 ரன்களில் ரஷீத் வெளியேற்றினார். பின்னர் ஷுப்மன் கில்-பியுஷ் சாவ்லா இணை நிதானமாக ரன்களை உயர்த்த முற்பட்டது. ஆனால் கெளல் பந்துவீச்சில் போல்டான சாவ்லா 12 ரன்களோடு வெளியேறினார். அப்போது 18.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை கொல்கத்தா எடுத்திருந்தது. கார்லோஸ் பந்தில் 6 ரன்களோடு சிவம் மவி ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடி வந்த ஷுப்மன் கில் 30 ரன்களுக்கு கார்லோஸ் பந்தில் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டையும், கார்லோஸ், கெளல் தலா 2 விக்கெட்டையும், ஷகிப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் இறுதிச் சுற்றில் நுழைந்தது. வரும் 27-ஆம் தேதி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையுடன் இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் மோதுகிறது.

ரஷீத் கான் அபாரம்
சுழற்பந்து வீச்சாளரான ரஷீத்கான் 4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 10 பந்துகளில் 34 ரன்களை குவித்தும், மேலும் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com