பெரிய தலைகளைச் சாய்த்த பந்தைச் சேதப்படுத்திய விவகாரம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவரும் பதவி விலகினார்!

இவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்பே தெரிந்திருந்தால் ஸ்மித், வார்னர், ஃபான்கிராப்ட் ஆகிய மூவரும்...
பெரிய தலைகளைச் சாய்த்த பந்தைச் சேதப்படுத்திய விவகாரம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவரும் பதவி விலகினார்!

இவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்பே தெரிந்திருந்தால் ஸ்மித், வார்னர், ஃபான்கிராப்ட் ஆகிய மூவரும் இத்தவறைச் செய்ய துணிந்திருக்க மாட்டார்கள் இல்லையா?

மூன்று வருடக் காலத்துக்குப் பதவி வகிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வான, டேவிட் பீவர் தற்போது பதவி விலகியுள்ளார். காரணம், அதே தான். பந்தைச் சேதப்படுத்திய விவகாரம். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தை சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்து 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பெயர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றிய டேரன் லேமனும் இச்சம்பவத்தால் பதவி விலகினார்.

பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் குறித்து சிட்னியைச் சேர்ந்த எதிக்ஸ் செண்டர் என்கிற தன்னாட்சி அமைப்பு ஆய்வு நடத்தி தனது ஆய்வறிக்கையை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அமைப்பு முன்வைத்துள்ள 42 பரிந்துரைகளில் 41-ஐ ஏற்றுக்கொண்டுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகம் ஒன்றை மட்டும் நிராகரித்துள்ளது. 

ஆணவப்போக்குடன் கட்டுப்படுத்தும் தன்மையுடன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடந்துகொள்வதால் வெற்றிக்காகத் தவறான வழிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பந்தைச் சேதப்படுத்திய சம்பவத்துக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா மிகவும் ஆணவப்போக்குடன் யாரையும் மதிப்பதில்லை. இதனால் தாங்கள் பண்டமாகப் பார்க்கப்படுவதாக வீரர்கள் எண்ணுகிறார்கள் என்று கடும் விமரிசனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, 3 நபர் கொண்ட நெறிமுறைகள் ஆணையம் அமைக்கப்படவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் தங்களுடைய செயல்களுக்கு கிரிக்கெட் வீரர்களும் நிர்வாக உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என்றும் ஒரு தீர்வாக இதைக் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியானதையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் டேவிட் பீவர் பதவி விலகியுள்ளார். துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் எர்ல் எட்டிங்ஸ், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவராகத் தற்காலிகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com