தோனி இல்லாதது கார்த்திக் மற்றும் பந்த்-க்கு நல்ல வாய்ப்பு: ரோஹித் சர்மா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டி20 தொடரில் தோனி இல்லாதது தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த்-க்கு நல்ல வாய்ப்பு என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டி20 தொடரில் தோனி இல்லாதது தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த்-க்கு நல்ல வாய்ப்பு என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். 

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, 

"இந்திய அணிக்கு தோனி மிகப் பெரிய வீரர். இந்த தொடரில் அவருடைய அனுபவம் இருக்காது. ஆனால், பந்த் மற்றும் கார்த்திக்குக்கு, திறமையை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பு. தங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.  

போதுமான வீரர்களுடன் மட்டுமே உலகக்கோப்பையை எதிர்கொள்ள முடியாது. கூடுதல் வாய்ப்புகள் அளிக்கும் வகையிலும் அணிக்கு வீரர்கள் தேவை. அதனால், தற்போதுள்ள வீரர்கள் அனைவரையும் பரிசோதிக்க இந்த தொடர் சிறந்த தளமாக அமையும். 

எத்தனை போட்டிகள் விளையாடுகிறோம் என்பது மிக முக்கியம். அதேசமயம், விளையாடு லெவனில் இடம்பெறாத மற்ற வீரர்களின் திறனையும் ஆராய வேண்டும். மாற்று வீரர்கள், குறித்து தான் தற்போது பேசிவருகிறோம். 

அணியில் இருக்கும் 15 வீரர்களை மட்டும் பார்க்கவில்லை. 15 வீரர்களுக்கு அப்பாற்பட்டு உள்ளவர்களையும் கவனிக்கவேண்டும். இந்திய அணியின் நிறைய புதுமுகங்கள் உள்ளனர். ஷபாஸ் நதீம் முதன்முதலாக அணிக்கு வந்துள்ளார். குருணால் பாண்டியா ஏற்கனவே அணியில் இருந்திருக்கிறார், ஆனால் விளையாடியதில்லை. 

இதுபோன்று இடம்பெறும் வீரர்களை தான் கவனித்து வருகிறோம். உலகக்கோப்பைக்கு சிறந்த அணியை தேர்வு செய்யும் வகையில், இவர்களிடமும் உள்ள திறன்களை கவனிக்கவேண்டியுள்ளது. எந்த வீரர் வாய்ப்பை தக்கவைத்துக்கொள்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும். 

கேப்டன் பொறுப்பு அனைத்து வகையிலும் உதவுகிறது. கேப்டன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றாகவே அனுபவிக்கிறேன். கேப்டனாக வழிநடத்தும் போது, அணியை முன்நின்று வழிநடத்தவேண்டும் என்கிற பொறுப்பை அது உணர்த்துகிறது. 

தற்போதும், நான் தற்காலிக கேப்டன். இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருக்கிறேன். கேப்டன் பொறுப்பு போட்டியையும், அணி வீரர்களையும் கூடுதலாக புரிந்துகொள்ள உதவுகிறது. எனினும் முதலில் நான் ஒரு வீரர், அதன் பிறகு தான் கேப்டன். ஒரு வீரராக அணிக்கு சிறப்பாக செயல்படுவதே எனது பணி. 

டி20 போட்டிகள் என்று வந்துவிட்டால், வலுவான அணியில் அவர்களும் ஒருவர். டி20 ரக கிரிக்கெட்டை அவர்களை எவ்வாறு அணுகுவார்கள் என்பதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். ஒரு அணியாக நாங்களை அதனை மறக்கமாட்டோம். 

அவர்கள் அனுபவம் வாய்ந்த அணி. டி20 கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகளை கண்டுள்ளனர். அவர்கள் வலுவான அணி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

அதனால், போட்டியில் களமிறங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்று எளிதாக இருக்காது. அவர்களை வீழ்த்த சிறந்த கிரிக்கெட்டை விளையாடவேண்டும். அவர்கள் ஓர் அணியாக என்ன செய்வார்கள் என்பதைவிட கவனம் முழுவதும் எங்களது அணியில் இருக்கிறது" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com