மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம்

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம்

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் குறைந்தது 3 பதக்கங்கள் வெல்வோம் என இந்திய குத்துச்சண்டை சம்மேளன உயர் செயல்திறன்

3 பதக்கங்கள் வெல்வோம்: இந்தியா நம்பிக்கை


உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் குறைந்தது 3 பதக்கங்கள் வெல்வோம் என இந்திய குத்துச்சண்டை சம்மேளன உயர் செயல்திறன் இயக்குநர் சான்டியாகோ நைய்வா கூறியுள்ளார்.
வரும் 15-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 24-ஆம் தேதி வரை உலக குத்துச்சண்டை போட்டி புது தில்லியில் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
5 முறை சாம்பியன் மேரி கோம் தலைமையில் 10 பேர் இந்திய அணி பங்கேற்கிறது. அவர் 6-ஆவது முறையாக தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.
இதுதொடர்பாக நைய்வா கூறியதாவது:
உலக சாம்பியன் போட்டியில் குறைந்தது 3 பதக்கங்களை எதிர்நோக்கியுள்ளோம். இதில் ஒரு தங்கமும் அடங்கும். தங்கம் இல்லையென்றால் இது மிகவும் மோசமான தோல்வியாக இருக்கும். 3 பதக்கங்களுக்கு மேல் வெல்லும் பதக்கங்கள் அனைத்தும் நமக்கு போனஸ் போன்றவை. 
மேரி கோமுக்கு கடினம்: மூத்த வீராங்கனை மேரி கோம் 6-ஆவது தங்கம் வெல்வது எளிதான செயல் இல்லை. அவரது பிரிவில் கடும் சவால் காத்துள்ளது. அவருக்கு எவரும் தங்கத்தை இலவசமாக தரப்போவதில்லை. எனவே சிறப்பாக ஆட வேண்டும். முந்தைய போட்டிகளிலும் மேரிக்கு அதிக நிர்ப்பந்தம் இருந்தது. ஆனால் அதை மீறிஅவர் வென்றார். அதே போல் இதிலும் வெல்வார்.
லவ்லினா (69 கிலோ), மணிஷா (54 கிலோ), ஆகியோர் பயிற்சி களத்தில் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் போட்டி என்பது வேறு. இதுஅவர்களது முதல் உலக போட்டியாகும். போதிய அனுபவம் இல்லையென்றாலும், இருவரும் சிறந்த வீராங்கனைகள் ஆவர்.
காற்று மாசு: வீராங்கனைகள் கவலை: புது தில்லியில் நிலவும் காற்று மாசு தொடர்பாக பல்வேறு வீராங்கனைகள் கவலை தெரிவித்துள்ளனர். பின்லாந்தின் ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனை மிரா பொட்கோனேன் கூறுகையில், எங்கள் நாட்டில் சுற்றுச்சூழல் மாசு என்பதே கிடையாது. ஆனால் தில்லியில் உள்ள காற்று மாசு எங்களை கவலைக்கு தள்ளியுள்ளது. எனினும் தில்லியின் பருவநிலை சிறப்பாக உள்ளது. மாசு இருந்தாலும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டும் என்றார்.
உயர்செயல்திறன் இயக்குநர் நைய்வா கூறுகையில்: குத்துச்சண்டை உள்ளரங்கிலேயே நடக்கும் என்பதால் காற்று மாசு குறித்து கவலைப்படத் தேவையில்லை. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போதும் சுற்றுச்சூழல் மாசு பிரச்னை நிலவியது. காற்று மாசை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இளம் வீராங்கனைகளே அச்சுறுத்தல்
உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இளம் வீராங்கனைகளே மிகவும் அச்சுறுத்தலாக திகழ்கின்றனர் என 5 முறை உலக சாம்பியன் மேரி கோம் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய மகளிர் குத்துச்சண்டையின் அடையாளாக திகழும் மேரி கோம், 5 முறை உலக சாம்பியன் பட்டம், ஒலிம்பிக் வெண்கலம், ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 
35 வயதான அவர் தற்போது 7-ஆவது உலகப் போட்டியில் களம் காண்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
கடந்த 2001 முதல் என்னுடன் மோதி வரும் வீராங்கனைகள் உள்ளனர். புதிய வீராங்கனைகள் கடினமாகவும், சிறப்பாகவும், வேகமாகவும் செயல்படுகின்றனர். நான் எனது அனுபவத்தின் துணை கொண்டு மோதுவேன்.
மூன்று சுற்றுகள் ஆடுவதற்கான சக்தி தான் எனக்கு முக்கியம். வீணாக குத்து விடுவதும் சக்தியை வீணாக்கி விடும். மூன்று சுற்றுகளை எதிர்கொள்வதற்கு ஏற்ப திட்டமிட வேண்டும். 12 நாடுகளில் இருந்து ஏராளமான வீராங்கனைகள் வந்துள்ளனர்.
அவர்களுடன் நேரம் செலவிடுவது பயனாக உள்ளது.
ஒவ்வொரு போட்டியும் சவால் நிறைந்தது தான். வெவ்வேறு வீராங்கனைகளுடன் மோதுகிறோம். இந்திய வீரர்கள் மெதுவாக தங்கள் ஆட்டத்தை தொடங்குகின்றனர். விரைவாக ஆடினால் சாதகமாகும் என்றார் மேரி.
கடந்த 2006-இல் தில்லியில் நடைபெற்ற உலகப் போட்டியில் இறுதியாக தங்கம் வென்றிருந்தார் கோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com