டி20யில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்: தொடரும் மிதாலி ராஜின் சாதனைகள்!

டி20 ஆட்டங்களில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சிறப்பையும் மிதாலி பெற்றுள்ளார்... 
டி20யில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்: தொடரும் மிதாலி ராஜின் சாதனைகள்!

அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3-வது முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை குவித்தது. மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் 51 ரன்களை விளாசினார். பின்னர் ஆடிய அயர்லாந்து 8 விக்கெட்டை இழந்து 93 ரன்களை மட்டுமே எடுத்தது. மே.இ.தீவுகளில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி ஏற்கெனவே பாகிஸ்தான், நியூஸிலாந்தை வென்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக அயர்லாந்தை இந்தியா வென்றுள்ளது. மிதாலி ராஜ் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்தார். இது அவருடைய 17-வது அரை சதம். 

இதன்மூலம் டி20 ஆட்டங்களில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சிறப்பையும் மிதாலி பெற்றுள்ளார். இதுவரை அவர் 80 இன்னிங்ஸில் 2283 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு இந்திய ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் 2207 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார் ரோஹித் சர்மா. 2102 ரன்களுடன் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார் கோலி. 

ஆடவர் தரப்பில் நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் 73 இன்னிங்ஸில் 2271 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதனையும் தற்போது தாண்டியுள்ளார் மிதாலி ராஜ். ஆடவர் தரப்பில் 2207 ரன்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் சோயிப் மாலிக் 2190 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்கள்.

எனினும் மகளிர் டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்தின் சூஸி பேட்ஸ் 2996 ரன்களும் மே.இ. அணியின் 2691 ரன்களும் எடுத்து முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளார்கள். அந்த இலக்கை அடைய குறைந்தது இன்னும் 20 ஆட்டங்களிலாவது விளையாடவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com