மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா

அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு ஆட்டத்தில் இந்தியா 52 ரன்கள்
மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா


அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு ஆட்டத்தில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3-ஆவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை குவித்தது. மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் 51 ரன்களை விளாசினார். பின்னர் ஆடிய அயர்லாந்து 8 விக்கெட்டை இழந்து 93 ரன்களை மட்டுமே எடுத்தது. 
மே.இ.தீவுகளில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி ஏற்கெனவே பாகிஸ்தான், நியூஸிலாந்தை வென்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக அயர்லாந்தை வியாழக்கிழமை இரவு கயானாவில் எதிர்கொண்டது.
டாஸ் வென்ற அயர்லாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய தரப்பில் மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தானா தொடக்க இணையாக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை கடைபிடித்தனர்.
விக்கெட்டுகள் சரிவு: 9.6 ஓவரின் போது, ஸ்மிருதி 29 பந்துகளில், 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் கிம் கார்த் பந்தில் போல்டனார்.
பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் களமிறங்கினார். அவர் 18 ரன்களுக்கும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 7 ரன்களுக்கும், வேதா கிருஷ்ணமூர்த்தி 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அப்போது 17,2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இந்தியா 127 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
மிதாலி ராஜ் அபாரம்: 18.3 ஓவரின் போது, மிதாலி ராஜ் 1சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிம் கார்த் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தயாளன் ஹேமலதா 4 ரன்களுடன் ரன் அவுட்டானார். மிதாலி ராஜ் தனது 17-ஆவது அரை சதத்தை பதிவு செய்தார்.
அதிக டி20 ரன்களை குவித்தவர்: டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சிறப்பையும் மிதாலி பெற்றார். 2283 ரன்களை அவர் சேர்த்துள்ளார்.
ரோஹித் சர்மா 2207, கோலி 2109, ஹர்மன்ப்ரீத் 1827, ரெய்னா 1605, தோனி 1487 ரன்களை குவித்துள்ளனர். இறுதியில் 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை குவித்தது. தீப்தி சர்மா 11 ரன்களுடனும், ராதா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அயர்லாந்து தரப்பில் கீம் கார்த், 2, டேலானி, ஐய்மர், லூஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அயர்லாந்து 93/8: பின்னர் ஆடிய அயர்லாந்து அணியில் இஸபெல் ஜாய்ஸ் 33, கிளாரே ஷில்லிங்டன் 23 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். கேபி லெவிஸ் 9, டெலானி 9, ஷவுனா கவனாக் 2, கிம் கார்த் 3, எய்மியர் 4, லாரா 0 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
மேரி வால்ட்ரன் 2, ரீக் 1 ரன்னுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 93 ரன்களை மட்டுமே நியூஸி அணி எடுத்தது. இதன் மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று டி20 உலகக் கோப்பையில் மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய தரப்பில் ராதா அபாரமாக பந்துவீசி 25 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். தீப்தி சர்மா 2, பூனம் யாதவ், ஹர்மன்ப்ரீத் கெளர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com