உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி: இந்தியாவின் 43 ஆண்டுகள் காத்திருப்பு கை கூடுமா?

இந்த நாள் இந்திய ஹாக்கி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாளாகும்.
தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கீழ் பயிற்சி பெறும் இந்திய ஹாக்கி வீரர்கள்.
தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கீழ் பயிற்சி பெறும் இந்திய ஹாக்கி வீரர்கள்.


15, மார்ச், 1975, இந்த நாள் இந்திய ஹாக்கி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாளாகும். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 3-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி இறுதி ஆட்டத்தில் பரம வைரி பாகிஸ்தானை 2-1 என்ற கோல்கணக்கில் இந்தியா வென்று சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்ற நாளாகும்.
ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெறவுள்ள 14-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்த சாதனையை மீண்டும் இந்தியா படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
முதல் உலகக் கோப்பைவெற்றி: கடந்த 1975-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜாம்பவான் அஜித்பால் சிங் தலைமையிலான இந்தியாவும்-பாகிஸ்தானும் மோதின. அதில் பாக். வீரர் ஸாகித் 17-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். பின்னர் 44-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுர்ஜித் சிங் முதல் கோலை அடித்தார். 
51-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் ஒலிம்பிக் ஜாம்பவான் தயான்சந்தின் மகன் அசோக்குமார் வெற்றி கோலை அடித்தார். இதன் மூலம் முதன்முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இதற்கு முன்னதாக 1971-இல் முதல் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பட்டம் வென்றது. இந்தியா 1973-இல் இரண்டாம் இடம் பெற்றது. 1982-இல் மும்பையில் நடந்த போட்டியில் 5-ஆம் இடம் பெற்றது.
இந்நிலையில் நிகழாண்டு ஒடிஸாவில் வரும் 28 -ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. 5 கண்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கலந்து கொள்கின்றன. 
13 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் மீண்டும் உலகக் கோப்பை ஹாக்கி நடக்கிறது. ஏ பிரிவில் ஆர்ஜென்டீனா, நியூஸிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, சி பிரிவில் இந்தியா, பெல்ஜியம், கனடா, தென்னாப்பிரிக்காவும், டி பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் ஒரு முறை மற்றொரு அணியுடன் விளையாடவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி காலிறுதிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பெறும் அணிகளுக்கு கிராஸ்ஓவர் ஆட்டங்கள் நடைபெறும். பின்னர் எலிமினேஷன் ஆட்டம் நடைபெறும்.
28-இல் தொடக்க விழா: 28-இல் தொடக்க விழா நடக்கிறது. மேலும் அன்றே தொடக்க ஆட்டங்களில் பெல்ஜியமும்-கனடாவும், இந்தியாவும்-தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. 12, 13 தேதிகளில் காலிறுதி ஆட்டங்களும், 15-ஆம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், மூன்றாவது இடத்துக்கான ஆட்டமும் நடைபெறுகிறது. 16-ஆம் தேதி மாலை இறுதி ஆட்டம் நடக்கிறது.
முந்தைய 13 உலகக் கோப்பைகளிலும் இந்தியா பங்கேற்றது. 1971-இல் மூன்றாம் இடம், 1973-இல் இரண்டாவது இடம், பெற்றது. அதன் பின்னர் பெரிய வெற்றியை பெறவில்லை. 1982-,1994 5-ஆவது இடம், 1978, 2014 இல் 6-ஆவது இடம், 2010-இல் 8ஆவது, 1998-இல் 9-ஆவது, 1990, 2002--இல் 10-ஆவது, 2006-இல் 11-ஆவது, 1986-இல் 12 கடைசி இடத்தையே இந்தியா பெற்றது.
முடிசூடா மன்னன்: கடந்த 1928 முதல் 1956 வரை ஹாக்கியில் முடிசூடா மன்னனாக இந்தியா திகழ்ந்தது. ஒலிம்பிக்கில் தொடர்ந்து 6 முறை உள்பட 8 தங்கம் வென்றுள்ளது. ஒருமுறை வெள்ளி, 2 முறை வெண்கலப் பதக்கங்களையும் வென்றது.
புல்தரையில் இந்தியாவுக்கு எந்த அணியும் பெரிய சவாலை ஏற்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் எஃப்ஐஎச் ஹாக்கியை துரித ஆட்டமாக மாற்ற செயற்கை புல்தரை ஆஸ்ட்ரோ டர்ஃப் மைதானங்களை அறிமுகம் செய்தது. அதன்பின் இந்தியா ஹாக்கி சரிவைக் கண்டது. 
மீண்டும் புத்துயிர்: பாரம்பரிய முறைப்படி ஆட்டம் ஆடிய ஆசிய அணிகள் சிக்கலுக்கு ஆளாகின. ஹாக்கியின் நவீன ஆட்டமுறை புரிய 30 ஆண்டுகள் ஆகியது இந்திய நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், வீரர்களுக்கு. வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள், நவீன பயிற்சி முறை, கூடுதல் செயற்கை புல்தரை மைதானங்கள், உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்ற ஹாக்கி லீக் போட்டி, போன்றவை இந்தியாவில் மீண்டும் ஹாக்கிக்கு புத்துயிருட்டின.
5-ஆவது இடத்தில் இந்தியா: தற்போது ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, பெல்ஜியம், நெதர்லாந்து போன்றவை முதல் நான்கு இடங்களில் உள்ள நிலையில் இந்தியா 5-ஆவது இடத்தை தரவரிசையில் பெற்றுள்ளது. 
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பலமான ஆஸி. அணி இந்தியாவின் கடும் எதிர்ப்பால் பெனால்டி ஷூட்அவுட்டில் மட்டுமே வெல்ல முடிந்தது.
சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பெல்ஜியம், கனடா, தென்னாப்பிரிக்காவை வென்றால் நேராக காலிறுதிக்கு முன்னேறும். இல்லையென்றால் கிராஸ்ஓவர் ஆட்டத்தில் ஆட வேண்டும்.
43 ஆண்டுகள் காத்திருப்பு: 12-ஆம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேற பெல்ஜியம் மட்டுமே தடையாக உள்ளது. கோப்பையை வெல்ல நெதர்லாந்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். இதன் மூலம் 43 ஆண்டுகள் கனவை இந்திய அணி நனவாக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீவிர பயிற்சியில் இந்திய அணி: தேசிய அணியை தேர்வு செய்வதற்காக 34 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு புவனேசுவரத்தில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
தற்போது 10 பேர் திரும்பி விட்டனர். 18 பேர் கொண்ட பிரதான அணியோடு, 6 பேர் ஸ்டான்ட்பைகளாக உள்ளனர். தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் தலைமையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com