ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் மீதான தடை தொடரும்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு!

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் மூன்று வீரர்கள் மீதான தடை தொடரும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது...
ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் மீதான தடை தொடரும்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு!

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் மூன்று வீரர்கள் மீதான தடை தொடரும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

கடந்த வருடம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தை சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அவர்களுடைய பெயர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டன. பயிற்சியாளர் டேரன் லேமன் பதவி விலகினார். இப்பிரச்னை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சுயேச்சையான குழுவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) நிர்வாகத்தைக் கடுமையாக சாடியிருந்தது. இதனால் சிஏ தலைவர் டேவிட் பீவர், சிஇஓ ஜேம்ஸ் சதர்லேண்ட், இயக்குநர் மார்க் டெய்லர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர். அதன் தொடர்ச்சியாக அணி செயல்திறன் தலைவர் பேட் ஹோவர்ட். ஒளிபரப்பு இயக்குநர் பென் அமர்பியோ ஆகியோரும் பதவி விலகினார்கள்.  தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் புதிய சிஇஓவாக கெவின் ராபர்ட்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் சார்பில் இந்தத் தடையை நீக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது. மூன்று வீரர்களின் தடை தொடரும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதையடுத்து மூன்று வீரர்களும் தங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை முழுவதுமாக அனுபவிக்கவுள்ளார்கள்.

டேரன் லேமேனின் பதவி விலகலையடுத்து ஜஸ்டின் லேங்கர் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய 21 ஆட்டங்களில் ஐந்தில் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டுள்ளது. 

தடைக்குப் பிறகு ஜனவரியில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பான்கிராஃப்ட் விளையாடவுள்ளார். ஆனால் ஸ்மித்தும் வார்னரும் ஏப்ரல் வரைக் காத்திருக்கவேண்டியிருக்கும். ஏப்ரலில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com