கிரேக் சேப்பல் குறித்து என்னிடம் எச்சரித்த ஆஸி. வீரர்: சுயசரிதையில் வி.வி.எஸ். லக்‌ஷ்மண்

அவருடைய எண்ணங்களாலும் அணுகுமுறைகளாலும் அவர் மீதான நம்பிக்கை தூள் தூளாவதற்கு நீண்ட நாள் ஆகவில்லை...
கிரேக் சேப்பல் குறித்து என்னிடம் எச்சரித்த ஆஸி. வீரர்: சுயசரிதையில் வி.வி.எஸ். லக்‌ஷ்மண்

2005-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் முன்னாள் ஆஸி. வீரர் கிரேக் சேப்பல். 2007 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறும் வரை அவர் பயிற்சியாளராக நீடித்தாலும் அவருடைய அந்தக் காலக்கட்டம் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இந்திய வீரர்களுடன் அவருக்கு ஏற்பட்ட மோதல்களை பல்வேறு தருணங்களில் கங்குலி, சச்சின் உள்ளிட்ட இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் 281 and Beyond என்கிற சுயசரிதையை எழுதியுள்ள முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்‌ஷ்மண், சேப்பல் குறித்து அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:

கிரேக் சேப்பலின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய புகைப்படங்கள், விடியோக்களைக் கண்டு அதிக மதிப்பு வைத்திருந்தேன். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இருமுறை சந்தித்துள்ளேன். அவருடைய கிரிக்கெட் அறிவு கண்டு அவர் மீதான மதிப்பு மேலும் அதிகமானது. 

ஜான் ரைட்டுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கிரேக் சேப்பல் நியமிக்கப்பட்டபோது மிகவும் மகிழ்ந்தேன். 2005-ல் இங்கிலாந்துக்குச் சென்று கிளப் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடச் சென்றேன். அங்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கிரேக் பிளெவெட், கிரேக் சேப்பலிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்று எனக்கு அறிவுறுத்தினார். பிளெவ்ட்டின் மாநில அணியான தெற்கு ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராக சேப்பல் இருந்துள்ளார். அந்த அணிக்குள் நிலையின்மையை அவர் உருவாக்கியதாக பிளெவெட் கூறினார். ஆனால் பிளெவெட் சொன்னதை நான் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. 

ஆனால் காலப்போக்கில் இந்திய அணி எதிர்பார்த்த ஒரு பயிற்சியாளர் அவர் அல்லர் என்பதை நான் புரிந்துகொண்டேன். நாங்களும் அணி வீரர்களும் கிரேக் சேப்பலை மோசமான நபராகச் சித்தரிக்க விரும்பவில்லை. நான் ஏற்கெனவே சொன்னதுபோல, அவருடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வமாகவே இருந்தேன். ஆனால் அவருடைய எண்ணங்களாலும் அணுகுமுறைகளாலும் அவர் மீதான நம்பிக்கை தூள் தூளாவதற்கு நீண்ட நாள் ஆகவில்லை. அவர் மரியாதை குறைவாகவும் மோசமாக நடந்துகொள்பராகவும் இருந்தார். எல்லாவற்றுக்கும் கருத்துகள் கொண்டவராகவும் தன்னுடைய எண்ணங்களில் பிடிவாதமாக இருப்பராகவும் நடந்துகொண்டார். அணி வீரர்களைத் திறமையாகக் கையாளவில்லை. ஏற்கெனவே தன்னம்பிக்கையில்லாத அணியாக இருந்த இந்திய அணிக்கு அதிருப்திகளை உருவாக்குபவராக இருந்தார் எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com