அதிரடியாக விளையாடிய ஆஸி. வீரர்கள்: இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிரடியாக விளையாடிய ஆஸி. வீரர்கள்: இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சாஹலுக்குப் பதிலாக கிருனால் பாண்டியா இடம்பெற்றார். 

முதல்3 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய அணி, 12 ஓவர்கள்தான் எடுத்தது. அதன்பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பவர்பிளே உள்ள முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது. ஷார்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 

கலீல் அஹமது வீசிய 8-வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்தார் லின். அந்த ஓவரில் ஆஸி. அணிக்கு 21 ரன்கள் கிடைத்தன. அடுத்த ஓவரில் ஃபிஞ்சை 27 ரன்களில் வெளியேற்றினார் குல்தீப் யாதவ். 

1 பவுண்டரி 4 சிக்ஸருடன் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கிய லின்னையும் தனது அடுத்த ஓவரில் 37 ரன்களில் வெளியேற்றினார் குல்தீப். 10.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து நல்ல நிலைமையில் இருந்தது ஆஸ்திரேலிய அணி.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்லும் ஸ்டாய்னிஸும் இந்தியப் பந்துவீச்சில் பலவீனமான பந்துவீச்சாளர்களான கிருனாலையும் கலீல் அகமதுவையும் நன்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். கிருனால் வீசிய 14-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்தார் மேக்ஸ்வெல். இதன்பிறகு கிருனாலின் கடைசி ஓவரில் மேலும் இரு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. 

16.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. அப்போது மேக்ஸ்வெல் 46, ஸ்டாய்னிஸ் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இருவரும் கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்து ஆட்டத்தை ஆஸி. அணிக்குச் சாதகமாக மாற்றியுள்ளார்கள்.

இதன்பிறகு 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 17-வது ஓவரை வீசிய பூம்ரா, 6 ரன்கள் கொடுத்து மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆஸி. அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 46 ரன்கள் எடுத்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களில் கலீல் அகமது 3 ஓவர்களில் 42 ரன்களும் கிருனால் பாண்டியா 4 ஓவர்களில் 55 ரன்களும் கொடுத்து இந்திய அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தினார்கள். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com