செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை மோகன்பகான் மற்றும் ரியல் காஷ்மீர் அணிகள் மோதின. இதில் 70-ஆவது நிமிடத்தில் மோகன் பகான் வீரர் திபந்தா டிக்கா அடித்த ஓரே கோல் மூலம் 1-0 என பகான் அணி வென்றது.

பாக்குவில் நடைபெற்ற அக்ரோபேட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன் போட்டியில் ஆடவர் பிரிவில் பிரின்ஸ் அரிஸ், சித்தேஷ், ருஷிகேஷ் மோரே, சூரிபாபு ஆகியோர் கொண்ட அணியும், மகளிர் பிரிவில் ஆயுஷ் கோடேஸ்வர், பிரச்சி பர்க்கி, மிருன்மயி ஆகியோர் கொண்ட அணியும் வெண்கலப்பதக்கங்களை வென்றன. முதன்முறையாக அக்ரோபேட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளனர்.

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் விளையாட்டு உபகரணங்கள் நிறுவனமான அடிடாஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உபகரணங்கள் மன்ப்ரீத்துக்கு இதன் மூல் கிடைக்கும். ஏற்கெனவே ஹிமா தாஸ், ரிஷப் பந்த், ஸ்வப்னா பர்மன், ரோஹித், குல்தீப் யாதவ், தீபிகா பல்லிக்கல், நிக்காத் ஜரீன், சித்தார்த் பந்தியா ஆகியோரும் அடிடாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஸ்பெயின் லா லிகா கால்பந்து லீகைச் சேர்ந்த 18 கிளப்புகளின் உயரதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகில இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகளுடன் இந்தியாவில் கால்பந்து மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். கால்பந்தையும் இந்தியாவில் மேலும் பிரபலமடையச் செய்யும் பணிகளில் ஈடுபடுவோம் என லா லிகா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி பாடத்திட்டங்களில் விளையாட்டையும் சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவானும், யுனிசெப் அமைப்பின் தூதுவரான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

வரும் 2028 ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்கள் வெல்லும் முதன்மையான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

இந்திய தொழில்முறை குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் அடுத்த ஆண்டு முதல் பங்கேற்க ஏதுவாக பிரபல போட்டி விளம்பரதாரர் பாப் அரும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆந்திரம்-தமிழகம் இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் துவக்க நாளான செவ்வாய்க்கிழமை ஆந்திரம் 198/8 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழக வேகப்பந்து வீச்சாளர் முகமது 4, சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 2 விக்கெட்டை வீழ்த்தினர். 

பந்தை சேதப்படுத்திய புகாரால் தடை விதிக்கப்பட்டுள்ள வீரர்கள் ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் ஆகியோர் முழு தடைக்காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

2030 பிஃபா உலகக் கோப்பை போட்டியை நடத்த மொராக்கோவுடன் இணைந்து விண்ணப்பிக்க ஸ்பெயின், போர்ச்சுகல் திட்டமிட்டுள்ளதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் உலக சாம்பியன் ஜெர்மனியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டு நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டி அரையிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து.

கொஸோவோ இடம் பெறும் எந்த உலக போட்டியையும் நடத்தும் வாய்ப்பை இந்தியாவுக்கு தரக்கூடாது என சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ஐஓசி அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com