டி20 தொடர் இன்று தொடக்கம்: வலுகுன்றிய ஆஸி.யை வெல்லும் முனைப்பில் வலுவான இந்திய அணி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் உற்சாகத்துடன் களமிறங்குகிறது இந்திய அணி.
கோப்பையுடன் விராட் கோலி-ஆரோன் பின்ச்.
கோப்பையுடன் விராட் கோலி-ஆரோன் பின்ச்.

* ஸ்மித், வார்னர் இல்லாமல் களம் இறங்கும் ஆஸி. அணி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் உற்சாகத்துடன் களமிறங்குகிறது இந்திய அணி. அதே நேரத்தில் அதிரடி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாமல் ஆட உள்ளது ஆஸி. அணி.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸி. சென்றுள்ளது.
வலுகுறைந்த ஆஸி. அணி: அதே நேரத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா தற்போது வலுகுறைந்த நிலையில் காணப்படுகிறது. தென்னாப்பிரிக்க தொடரில் உப்பு காகிதம் கொண்டு பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக அந்த அணியின் அதிரடி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேங்கிராப்ட் ஆகியோர் மீது விசாரணை நடத்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு (சிஏ) மூவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது.
இதனால் கடந்த 10 மாதங்களாக மூவரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் லீக் போட்டிகளில் பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது.
சிறந்த பேட்ஸ்மேன்களான ஸ்மித், வார்னர் இல்லாதது ஆஸி. அணியில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அண்மையில் தென்னாப்பிரிக்காவுடன் உள்ளூரில் நடைபெற்ற ஒரு நாள் தொடர் மற்றும் டி20 ஆட்டத்தில் ஆஸி.தோல்வியடைந்தது. அதே நேரத்தில் அந்த அணியின் பந்துவீச்சு வலுவானதாகவே உள்ளது. பேட்டிங்கில் ஆரோன் பின்ச், கிளென் மேக்ஸ்வெல், கிறிஸ் லீன், ஆர்சி ஷார்ட், ஆகியோரை முழுமையாக நம்பி உள்ளது. ஐசிசி தரவரிசையில் ஆரோன் பின்ச் பேட்டிங்கில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பெளலிங்கில் நாதன் நைல், பில்லி ஸ்டேன்லேக், ஆன்ட்ரு டை, ஜேஸன் பெஹ்ரென்டர்ப், ஆடம் ஸ்ம்பா, ஆஷ்டன் அகர், மெக்டர்மார்ட், ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாத நிலையில் ஆஸி. அணி உள்ளது.
வலுவான இந்திய அணி: அதே நேரத்தில் இந்திய அணி பேட்டிங், பெளலிங் இரண்டிலும் கூடுதல் பலத்துடன் ஆஸி.க்கு சென்றுள்ளது. 
கேப்டன் விராட் கோலி, ஐசிசி தரவரிசையில் பேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளார். கேஎல் ராகுல் 4, ரோஹித் சர்மா 7, ஆகியோர் உள்ளனர். அண்மையில் தொடர்ந்து 7 டி20 தொடர்களை வென்ற சாதனையுடன் இந்திய அணி ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பேட்டிங்கில் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ராகுல், க்ருணால் பாண்டியா, உள்ளனர்.
பெளலிங்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, கலீல் அகமது, சஹால், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் போன்றவர்களால் வலுவாக உள்ளது.
மிடில் ஆர்டர் பேட்டிங்கில் நிலவும் குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில் ராகுல், பந்த், க்ருணால் பாண்டியா, மணிஷ்பாண்டே ஆகியோர் உள்ளனர். 16 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு கோலிக்கு உள்ளது.

முதல் டி20 ஆட்டத்துக்கான இந்திய அணி அறிவிப்பு
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்),ஷிகர் தவன், கேஎல் ராகுல்,ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),தினேஷ் கார்த்திக், க்ருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார்,ஜஸ்ப்ரீத் பும்ரா,கலீல் அகமது, சஹால்.

ஆட்டங்கள் விவரம்
புதன்கிழமை 21-ஆம் தேதி பிரிஸ்பேன் காபாவில் முதல் டி20 ஆட்டம் நடக்கிறது.
23-ஆம் தேதி இரண்டாவது ஆட்டம் மெல்போர்னிலும், 25-ஆம் தேதி மூன்றாவது ஆட்டம் சிட்னியிலும் நடக்கிறது.

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம்: கோலி
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நாங்கள் செய்த தவறுகளை ஆஸி.யில் புரிய மாட்டோம். வெளிநாடுகளில் இந்தியாவின் ஆட்டம் மோசமாக உள்ளது என்ற அவப்பெயரை மாற்ற முயல்வோம். அதை மாற்றி தற்போது டெஸ்ட் மற்றும் தொடர்களை வெல்ல பாடுபடுவோம். இதற்கான தகுதி எங்களுக்கு உள்ளது. வலுகுறைந்து காணப்பட்டாலும், ஆஸி. அணி சொந்த மண்ணில் சவாலைத் தரும். இரு முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் ஆஸி. அணி சிறப்பாக செயல்படும். எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம். முழு ஆஸி. அணியுடன் விளையாட தான் வந்துள்ளோம். குறைந்தபட்ச ஓவர் ஆட்டத்தில் இந்தியா நன்றாக செயல்பட்டுள்ளது. 
புவனேஸ்வர், பும்ரா ஆகியோர் குறைந்தபட்ச ஓவர் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி வருகின்றனர். 2019 உலகக் கோப்பைக்கு முன்பு அவர்கள் பல ஆட்டங்களில் ஆடுவர். 
தன்மானமே முக்கியம்: மைதானத்தில் எதிரணி வீரர்கள் வெறுப்பேறும் வகையில் செயல்படுவது குறித்து கோலி கூறியதாவது: நாங்களாக எதையும் ஆரம்பிக்க மாட்டோம். ஆனால் லட்சுமண ரேகையை மீறி தன்மானத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஏதாவது நடந்தால் நாங்கள் அதை நின்று எதிர்கொள்வோம். எதிரணி ஆக்ரோஷமாக செயல்பட்டால், பதிலுக்கு நாங்கள் ஆக்ரோஷத்தை காண்பிப்போம். 

சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய அங்கம் வகிப்பர்: ஆரோன் பின்ச்
அதிரடி வீரர்கள் ஸ்மித், வார்னர் இல்லாத நிலையில் இந்தியாவை டி20 தொடரில் வெல்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குறுகிய ஓவர்கல் ஆட்டம் ஆக்ரோஷமாக விளையாட முடியும். இந்தியா மூன்று வகையான ஆட்டங்களிலும் சிறந்த பார்முடன் உள்ள போதிலும், அதிரடியாக விளையாடி எங்கள் திறமையை நிரூபிப்போம். டி20 ஆட்டத்தில் பேட்டிங், பெளலிங் அல்லது பீல்டிங்கில் ஒருவர் சிறப்பாக செயல்பட்டாலும் ஆட்டத்தின் போக்கே மாறி விடும். 
பெளலர்கள் அஷ்டன் அகர், ஆடம் ஸம்பாவை எவ்வாறு பயன்படுத்தலாம் என தீர்மானித்துள்ளோம். சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய அங்கம் வகிப்பர். காபா மைதானம் வேகம், பெளன்ஸ்க்கு உதவும். இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கு ஆடி இருந்தாலும், பவுண்டரிகள் எல்லை விரிவாக உள்ளதால் சிரமமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com