ஆஸி.க்கு எதிரான முதல் டி20 ஆட்டம்: 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் மழை பாதிப்பு காரணமாக டக்வொர்த் லெவிஸ் முறைப்படி இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஷிகர் தவன்.
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஷிகர் தவன்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் மழை பாதிப்பு காரணமாக டக்வொர்த் லெவிஸ் முறைப்படி இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
4 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தலைமையில் ஆஸி.சென்றுள்ளது. 
அதிரடி வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோர் இல்லாத நிலையில் ஆஸி. அணி வலுகுறைந்ததாக கருதப்பட்டது. மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா அணி வெற்றி பெறுவது எளிது என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கிடையே முதல் டி20 ஆட்டம் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 
குல்தீப் யாதவ் அபாரம்: ஆஸி. அணி தரப்பில் டி ஆர்சி ஷார்ட்-கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் ஆர்சி ஷார்ட் வெறும் 7 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆரோன் பின்ச் 27 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் பந்தில் கலீல் அகமதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மேக்ஸ்வெல் அதிரடி: பின்னர் கிறிஸ் லீன்-மேக்ஸ்வெல் இணை நிலைத்து ஆடி ரன்களை சேகரித்தது. 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 37 ரன்களை எடுத்த கிறிஸ் லீன், குல்தீப் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் தந்து வெளியேறினார்.
பின்னர் மேக்ஸ்வெல்-மார்கஸ் ஸ்டாய்னியஸ் இணை சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர். 4 சிக்ஸருடன் 24 பந்துகளில் 46 ரன்களை விளாசிய மேக்ஸ்வெல், பும்ரா பந்துவீச்சில் புவனேஸ்வரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். 1 சிக்ஸர்,3 பவுண்டரியுடன் 19 பந்துகளில் 33 ரன்களுடன் ஸ்டாய்னியஸும், 2 ரன்களுடன் பென் மெக்டர்மாட்டும் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை.
மழையால் ஆட்டம் பாதிப்பு: ஆட்டத்தின் இடையே மழை பெய்ததால் 45 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. இதனால் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் மொத்தம் 4 விக்கெட்டை இழந்து ஆஸி. அணி 158 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 24 ரன்களை தந்து 2 விக்கெட்டை சாய்த்தார். பும்ரா 1-21, கலீல் அகமது 1-42 விக்கெட்டை வீழ்த்தினர்.
ரோஹித்-விராட் கோலி அதிர்ச்சி: டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 174 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மா, ஷிகர் தவன் இணை களமிறங்கியது. ஆனால் துவக்கமே அதிர்ச்சி தரும் வகையில் 7 ரன்களுடன் ரோஹித், பெஹென்டார்ப் பந்தில் பின்சிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.
ஷிகர் தவன் ஆட்டம் வீண்: லோகேஷ் ராகுல் 13, கேப்டன் விராட் கோலி வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அப்போது இந்திய அணி 94/3 ரனக்ளை எடுத்திருந்தது. ஒரு புறம் வீரர்கள் ஆட்டமிழந்தாலும், ஷிகர் தவன் பொறுப்போடு ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 11.4 ஓவரின் போது, 2 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 76 ரன்களை எடுத்திருந்த தவன், ஸ்டேன்லேக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ரிஷப் பந்த்-தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தலா 1 சிக்ஸர், பவுண்டரியுடன் ரிஷப் பந்த் 20 ரன்களுக்கும், 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் தினேஷ் 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து ஆல் ரவுண்டர் க்ருணால் பாண்டியா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். புவனேஸ்வர் குமார் 1, குல்தீப் 4 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
17 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 169 ரன்களை மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது. இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணி முதல் ஆட்டத்தில் வென்றது. ஆஸி. தரப்பில் ஆடம் ஸம்பா 2-22, ஸ்டாய்னியஸ் 2-27, ஜேஸன் பெஹென்டார்ப் 1-43, ஸ்டேன்லேக் 1-27, டை 1-47 விக்கெட்டை வீழ்த்தினர். ஆடம் ஸம்பா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
9 டி 20 ஆட்டங்களில் ரன் சேஸ் செய்து வென்ற இந்திய அணி தற்போது பெறும் முதல் தோல்வி இதுவாகும். 
4 தோல்விகளுக்கு பின் ஆஸி. பெறும் முதல் வெற்றி இதுவாகும். அதே போல் 4 வெற்றிகளுக்கு பின் இந்தியா பெறும் முதல் தோல்வி இதுவாகும். 
விராட் கோலி கடந்த 2016-இல் ஓரே ஆண்டில் 15 ஆட்டங்களில் 641 ரன்கள் அடித்த சாதனையை தவன் தற்போது 16 ஆட்டங்களில் 648 ரன்களை எடுத்து முறியடித்தார். இரண்டாவது ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை (23-ம் தேதி) மெல்போர்னில் நடைபெறுகிறது.

ஏராளமான இந்திய ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து ஆதரவு தெரிவித்தனர். இது மிகவும் நெருக்கமாக அமைந்த ஆட்டம். பேட்டிங் தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும், மிடில் ஓவர்களில் ஆட்டம் குலைந்து விட்டது. இறுதியில் ரிஷப் பந்த்-தினேஷ் அணியை வெற்றி பெறச்செய்வார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் பந்த் அவுட்டானது ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது.
தவன் டாப் ஆர்டரில் அதிரடியாக ஆடியுள்ளார். இந்த ஆட்டத்தின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். அணியில் 4 அல்லது 5 வீரர்கள் சிறப்பாக ஆடினால் வெற்றி எளிதாகும். அதை தான் எதிர்நோக்கியுள்ளேன்
.
- விராட் கோலி

எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக மிடில் ஓவர்களில் பேட்டிங் நன்றாக இருந்தது. இந்திய அணியை தைரியம், தன்னம்பிக்கையுடன் எதிர் கொண்டனர். அழுத்தம் இருந்த போதிலும் பெளலர்கள் பந்துவீச்சு நன்றாக இருந்தது. 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 1 ஆல்ரவுண்டருடன் ஆடியது சிறப்பாக அமைந்தது. ஸ்டாய்னியஸ் பேட்டிங், பெளலிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.
- ஆரோன் பின்ச்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com