விஹாரி தோல்வியடைந்தால் என்ன செய்வீர்கள்?: கருண் நாயரின் நீக்கம் குறித்து ஹர்பஜன் சிங் கேள்வி!

கருண் நாயரை அணியிலிருந்து நீக்கியதற்கு ஹர்பஜன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்...
விஹாரி தோல்வியடைந்தால் என்ன செய்வீர்கள்?: கருண் நாயரின் நீக்கம் குறித்து ஹர்பஜன் சிங் கேள்வி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் ஆட்டங்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் அணியில் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துடன் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் சோபிக்காத நிலையில் தேர்வுக் குழு அவரை நீக்கியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம்,ஆசிய கோப்பை என தொடர்ந்து விளையாடி வரும் பந்துவீச்சளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. மேலும், கருண் நாயருக்கும் இந்திய அணியில் இடமளிக்கப்படவில்லை. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.

கருண் நாயரை அணியிலிருந்து நீக்கியதற்கு ஹர்பஜன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: 

இதில் உள்ள மர்மம் விடுவிக்கப்படவேண்டும். மூன்று மாத காலமாக அணியில் இருந்துகொண்டு விளையாட வாய்ப்பில்லாத ஒரு வீரர் எப்படி ஒரே நாளில் மோசமான வீரர் ஆனார்? தேர்வுக்குழுவினரின் எண்ணங்களையும் அணி வீரர்களைத் தேர்வு செய்வதில் உள்ள அளவுகோலையும் புரிந்துகொள்வதில் சிரமம் அடைகிறேன். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சிலர் வெற்றியடைய பல வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் சிலர் ஒருமுறை கூட தோற்க வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இது நியாயமில்லை. அடுத்த இரு டெஸ்டுகளிலும் விஹாரி தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? நிச்சயம் அப்படி நடக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி நடந்தால் மீண்டும் கருண் நாயரைத் தேர்வு செய்வீர்களா? அப்போது அவர் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வாரா? தேர்வுக்குழுவினரும் அணி நிர்வாகமும் ஒரே அலைவரிசையில் உள்ளார்களா? இல்லையென்றால் அணி நிர்வாகம் பரிந்துரைத்த பெயரை பரிசீலனை செய்தீர்களா? ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான அணியைத் தேர்வு செய்யும் முன்பு இந்தக் குறைகள் தீர்க்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்களில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, அக்டோபர் 4-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com