ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி நாளை தொடக்கம்

ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை இந்தியா மீண்டும் தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி.


ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை இந்தியா மீண்டும் தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹாக்கியில் ஒரு காலத்தில் உலகின் வல்லரசாகவும், 8 முறை ஒலிம்பிக் தங்கத்தை வென்றும் சாதனை படைத்த இந்திய அணி தனது பெருமையை இழந்தது. ஒலிம்பிக்கில் கடைசி இடம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது.
தற்போது ஹாக்கி இந்தியா அமைப்பு, சாய் போன்றவற்றின் தீவிர முயற்சியால் ஹாக்கி இழந்த பெருமையை மெதுவாக அடைய போராடி வருகிறது. கடந்த ஜூலை மாதம் நெதர்லாந்தின் பிரெடா நகரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு இணையாக சிறப்பாக ஆடி நூலிழையில் பட்டத்தை தவற விட்டது. இந்தியா. தற்போது ஹாக்கி ஆடவர் அணி உலகத் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ளது.
ஆசிய போட்டியில் தோல்வி
ஆனால் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியப் போட்டி அரையிறுதியில் பலம் குறைந்த மலேசியாவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பின்னர் பாகிஸ்தானை வென்று வெண்கலப் பதக்கத்துடன் திரும்பியது.
ஆசிய அளவில் வழக்கமாக பாகிஸ்தான், தென்கொரிய அணிகள் தான் இந்தியாவுக்கு சவால் ஏற்படுத்துபவையாக இருக்கும். ஆனால் தற்போது அந்த அணிகளை எளிதாக வீழ்த்தி வரும் இந்தியாவுக்கு புதிய சிக்கலாக, மலேசியா, ஜப்பான் அணிகள் உருவெடுத்துள்ளன.
ஆசிய சாம்பியன்ஸ் போட்டி: கடந்த 2016 இல் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்று பட்டம் வென்றது. இந்நிலையில் வரும் வியாழக்கிழமை ஓமனின் மஸ்கட் நகரில் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-ஓமனை எதிர்கொள்கிறது. 
வரும் டிசம்பர் மாதம் ஒடிஸாவின் புவனேசுவரத்தில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கு தயாராகும் வகையில்இந்தியாவுக்கு |ஆசிய சாம்பியன்ஸ் போட்டி அமைந்துள்ளது. இதில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
இதுதொடர்பாக கேப்டன் மன்பிரீத் சிங் கூறியதாவது-
கடந்த ஜகார்த்தா ஆசியப் போட்டியில் அடைந்த ஏமாற்றத்துக்கு ஆறுதல் தேடும் வகையில் ஆசிய சாம்பியன்ஸ் போட்டி அமையும் என எதிர்பார்க்கிறோம். உலகக் கோப்பைக்கு தயாராகவும் இந்த போட்டி உதவும், தலைசிறந்த ஆசிய அணிகளை மீண்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகக் கோப்பையில் நாம் புதிய எழுச்சியுடன் போட்டியிட வேண்டும். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும்பட்டம் வெல்வோம் என்றார்.
ஜப்பான் பயிற்சியாளர் ஐக்மேன் கூறியதாவது-
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளது. பயிற்சியாளர் ஹரேந்திர சிங்கின் தலைமையில் இதற்கான நுணுக்கம், திறன் அணிக்கு உள்ளது. 
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற எங்கள் அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் நோக்கில்உள்ளோம் . இந்தியா, பாகிஸ்தான், கொரியா, மலேசியா அணிகளை எதிர்கொள்வதில் எந்த அச்சமும் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com