ஸ்பாட் ஃபிக்ஸிங் செயலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா ஒப்புதல்!

கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது ஸ்பாட் ஃபிக்ஸிங் செயலுக்கு உதவியதாக...
ஸ்பாட் ஃபிக்ஸிங் செயலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா ஒப்புதல்!

கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது ஸ்பாட் ஃபிக்ஸிங் செயலுக்கு உதவியதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா பேட்டியளித்துள்ளார்.

எஸெக்ஸ் கவுண்டி அணியில் விளையாடியபோது டேனிஷ் கனேரியாவும் மெர்வின் வெஸ்ட்ஃபீல்டும் 2009-ல் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. டர்ஹம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆறாயிரம் பவுண்டுக்காக குறிப்பிட்ட ஓவரில் குறிப்பிட்ட ரன்களை வழங்கும்படியான ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார் மெர்வின் வெஸ்ட்ஃபீல்டு. இதற்காக அவர் சிறைத்தண்டனையை அனுபவித்தார். 2010-ல் அவருடன் கைதான கனேரியா, தன் தவறை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவர் மீதான வழக்கு ரத்தானது. வெஸ்ட்ஃபீல்டுக்கும் அனு பட் என்கிற சூதாட்டக்காரருக்கும் இடையே தூதராகச் செயல்பட்டதாக கனேரியா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனினும் கனேரியாவை 2012-ல் தடை செய்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 

அல் ஜஸீரா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டேனிஷ் கனேரியா கூறியுள்ளதாவது: 2012-ல் இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் என் மீது சுமத்திய ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறேன். இதைச் சொல்லும் வலிமையைப் பெற்றுள்ளேன். பொய்களுடனான வாழ்க்கையை உங்களால் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. அப்போது எஸெக்ஸ் அணியில் எனக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. சர்வதேச கிரிக்கெட் வீரராகவும் இருந்தேன். நல்ல செளகரியமான வாழ்க்கையை வாழ்ந்தேன். என்னைப் போல வசதியான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டார் வெஸ்ட்ஃபீல்ட். அவரை சூதாட்டக்காரரான அனு பட் குறிவைத்தார். ஆசைக் காட்டியதில் தவறு செய்ய ஒப்புக்கொண்டார் வெஸ்ட்ஃபீல்ட். அவரிடம் அனு பட் குறித்து நான் கூறியிருக்கவேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. 2005 முதல் எனக்கு அனு பட் பழக்கம். சூதாட்டத்தில் ஈடுபட்ட அனு பட் குறித்து ஐசிசியிடம் தெரிவிக்காமல் இருந்துவிட்டேன். 

என் தந்தை உடல்நலமில்லாமல் இருந்தார். புற்றுநோயால் 2013-ல் இறந்துபோனார். அவருக்காகத்தான் உண்மையைக் கூறாமல் இருந்தேன். நான் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியதில் அவர் மிகவும் பெருமிதமாக இருந்தார். என் செயலுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார். 

கனேரியா, பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்டுகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை எடுத்து பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com