யூத் ஒலிம்பிக்: மும்முறை தாண்டுதலில் வெண்கலம் வென்றார் தமிழக வீரர் சித்திரைவேல்

ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டி தடகளம் மும்முறை தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த சித்திரைவேல் வெண்கலம் வென்றார்.
வெண்கலம் வென்ற பிரவீண் சித்திரைவேல்.
வெண்கலம் வென்ற பிரவீண் சித்திரைவேல்.


ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டி தடகளம் மும்முறை தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த சித்திரைவேல் வெண்கலம் வென்றார்.
செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மும்முறை தாண்டுதல் இரண்டாம் கட்ட போட்டியில் பிரவீண் சித்திரைவேல் 15.84 மீ தூரம் தாண்டி வெண்கலம் வென்றார். கியூபா தங்கமும், நைஜீரியா வெள்ளியும் வென்றன.
இது தடகளத்தில் இந்தியா பெறும் இரண்டாவது பதக்கமாகும். 5000 மீ. நடை ஓட்டத்தில் இந்திய வீரர் பன்வர் வெள்ளி வென்றிருந்தார். இதுவரை யூத் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம், 8 வெள்ளிப் பதக்கங்களை இந்தியா வென்றது. முதன்முறையாக வெண்கலம் வென்றுள்ளது.
ஏழைத் தொழிலாளியின் மகன் சித்திரைவேல்: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் பிரவீண் சித்திரைவேல், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சித்திரைவேல் தந்தை தினக்கூலித் தொழிலாளி ஆவார். நிகழாண்டில் நடைபெற்ற கேலோ இந்தியா பள்ளிகள் விளையாட்டில் சித்திரைவேல் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். 
சித்திரைவேல் அதிர்ஷ்டவசமாக சென்னையைச் சேர்ந்த சாய் பயிற்சியாளர் இந்திரா சுரேஷுக்கு அறிமுகம் ஆனார். அவருக்கு வழிகாட்டியாக இருந்து பயிற்சி அளித்த இந்திரா சுரேஷ் நாகர்கோவிலுக்கு பணிமாறுதலில் சென்றதால், அங்கு கல்லூரிக்கு சென்று சேர்ந்தார் சித்திரைவேல். தற்போது முதன்முறையாக யூத் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கலம் வென்றுள்ளார். திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 17 வயது சித்திரைவேல் 16.22 மீ தூரம் தாண்டி சாதனை படைத்தார். 18 வயதுப் பிரிவில் உலகின் 7-ஆவது சிறந்த சாதனையாக இது அமைந்தது.
இதுதொடர்பாக பயிற்சியாளர் இந்திரா சுரேஷ் கூறியதாவது:
சென்னையில் பிரவீணை 7-ஆவது வகுப்பு பயிலும் போது கண்டேன். என்னுடன் அழைத்துச் சென்று தீவிர பயிற்சி அளித்தேன். நான் நாகர்கோவிலுக்கு மாறுதலாகி சென்ற போது, என்னிடம் தான் பயிற்சி பெறுவேன் என சித்திரைவேல் கூறியதால், கல்லூரியில் சேர ஏற்பாடு செய்தேன். அவரது தம்பியும் என்னிடம் தான் பயிற்சி பெறுகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு ஒரு சகோதரி, ஒரு தம்பி உள்ளனர். நிகழாண்டில் கோவையில் நடைபெற்ற தேசிய ஜூனியர் சாம்பியன்போட்டியில் வெள்ளி வென்ற சித்திரைவேலுக்கு எதிர்காலத்தில் ஆசிய போட்டி, காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் திறன் உள்ளது. 
அவரை தேசிய சாம்பியனாக உருவாக்கி, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கச் செய்வதே எனது நோக்கம். தற்போது நாகர்கோவிலில் பயிற்சி பெற்றுக் கொண்டே, மங்களூருவில் உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். தேர்வுக்காக மட்டும் மங்களூரு செல்வார். சித்திரைவேலுக்கு சிலர் நிதியுதவி செய்து வருகின்றனர். அவரது பயிற்சி, போட்டியில் பங்கேற்க நான் உதவுகிறேன். அவரது தடகள பயிற்சிக்கு பணம் செலவிடும் நிலையில் குடும்பம் இல்லை என்றார் இந்திரா.

பயிற்சியாளர் இந்திரா சுரேஷ் உடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com