டென்மார்க் ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால்

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
டென்மார்க் ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால்

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். 

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்று போட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 

மகளிர் ஒற்றையர் காலிறுதி:

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா வீராங்கனை சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனை ஓகுஹாராவை எதிர்கொண்டார். 58 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டை 17-21 என்ற புள்ளிகள் கணக்கில் சாய்னா நேவால் இழந்தார். இதையடுத்து, எழுச்சி பெற்ற சாய்னா அடுத்தடுத்து 2 செட்டை 21-16 மற்றும் 21-12 என கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் இவர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதிச் சுற்றில் இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியா மரிஸ்காவை அவர் எதிர்கொள்கிறார். 

ஆடவர் ஒற்றையர் காலிறுதி:

ஆடவர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், 23-ஆவது இடத்தில் இருக்கும் சகநாட்டு வீரரான சமீர் வெர்மாவை எதிர்கொண்டார். இவர்கள் இருவரும் இதற்கு முன் இதுபோன்று காலிறுதி சுற்றில் நேருக்கு நேர் விளையாடியதில்லை.     

இந்தப் போட்டியில் சமீர் வெர்மா, கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், முதல் செட்டை கிடாம்பி ஸ்ரீகாந்த் 22-20 என போராடி கைப்பற்றினார். இதே போன்று 2-ஆவது செட்டிலும் நெருக்கடி அளித்த சமீர் வெர்மா 21-19 என செட்டை தன்வசப்படுத்தினார். இதனால், வெற்றியை தீர்மானிக்கும் 3-ஆவது செட்டில் பரபரப்பு அதிகரித்தது. 

முதல் இரண்டு செட்டை போலவே 3-ஆவது செட்டிலும் இருவரும் சிறப்பாக விளையாடினர். ஒருகட்டத்தில் சமீர் வெர்மா 17-13 என் முன்னிலை வகிக்க வெற்றியை நெருங்கினார். ஆனால், இறுதிக் கட்டத்தில் எழுச்சி பெற்ற கிடாம்பி ஸ்ரீகாந்த் 3-ஆவது செட்டை 23-21 என கைப்பற்றி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் நீடித்தது. 

நேருக்கு நேர்:

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய கிடாம்பி ஸ்ரீகாந்த் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார். இவர்கள் இருவரும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில், 8-3 வெற்றி என ஜப்பான் வீரர் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். குறிப்பாக கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. 

மகளிர் இரட்டையர் காலிறுதி:

மகளிர் இரட்டையர் காலிறுதிச் சுற்றில், இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா மற்றும் என்.சிக்கி ரெட்டி இணை, யுகி ஃபுகுஷிமா மற்றும் சயாகா ஹிரோடா இணையிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com