யூத் ஒலிம்பிக் வில் வித்தையில் ஆகாஷுக்கு வரலாற்று வெள்ளி

யூத் ஒலிம்பிக் போட்டியில் வில் வித்தை விளையாட்டில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக் (15) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இறுதிச்சுற்றில் இலக்கை நோக்கும் ஆகாஷ் மாலிக்.
இறுதிச்சுற்றில் இலக்கை நோக்கும் ஆகாஷ் மாலிக்.


யூத் ஒலிம்பிக் போட்டியில் வில் வித்தை விளையாட்டில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக் (15) வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம், யூத் ஒலிம்பிக் போட்டியின் வில் வித்தையில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் வென்று தந்த வீரர் என்ற பெருமையை ஆகாஷ் பெற்றுள்ளார்.
ஆடவர் தனிநபர் ரீகர்வ் பிரிவின் இறுதிச்சுற்றில் ஆகாஷ் மாலிக், அமெரிக்காவின் டிரென்டன் கெளல்ஸிடம் 0-6 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்தார்.
தோல்விக்குப் பிறகு பேசிய ஆகாஷ் மாலிக், இறுதிச் சுற்றுக்காக காற்றை எதிர்கொண்டு அம்பு விடும் சூழலில் பயிற்சி பெற்றிருந்தேன். எனினும், போட்டி நடைபெற்ற இடத்தில் காற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சரியான வாய்ப்பு அமையாம் போனது. டிரென்டன் என்னை விட பலமிக்கவராக இருந்தார் என்றார்.
6 ஆண்டுகளுக்கு முன்பாக வில் வித்தையில் தடம் பதித்த ஆகாஷ் மாலிக், ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். குடும்பச் சூழல் காரணமாக, முதலில் அவர் வில் வித்தை விளையாட்டில் பங்கேற்பதற்கு அதிருப்தி தெரிவித்த குடும்பத்தினர், அவர் பதக்கம் வெல்லத் தொடங்கிய பிறகு உரிய ஆதரவளித்து வருகின்றனர்.
2014-இல் விஜயவாடாவில் நடைபெற்ற சிறிய அளவிலான தேசிய வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆகாஷ் அடங்கிய ஆடவர் அணி தங்கம் வென்றிருந்தது. அதேபோல், இந்த யூத் ஒலிம்பிக் போட்டிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் ஆகாஷ் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த யூத் ஒலிம்பிக்கில், போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த ஆகாஷ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினின் ஜோஸ் சொலேராவை 6-2 என்ற கணக்கிலும், காலிறுதியில் மெக்ஸிகோவின் கார்லோஸ் வகாவை 6-4 என்ற புள்ளிகளிலும், அரையிறுதியில் பெல்ஜியத்தின் சென்னா ரோஸை 6-0 என்ற கணக்கிலும் வென்றிருந்தார்.
போட்டிகள் நிறைவு
ஆர்ஜெண்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 12 நாள்களாக நடைபெற்று வந்த யூத் ஒலிம்பிக் போட்டிகள் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தன. இதில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, ஒரு வெண்கலம் என 13 பதக்கங்களுடன் 17-ஆவது இடம் பிடித்தது.


ரஷியா 29 தங்கம், 18 வெள்ளி, 12 வெண்கலம் என 59 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. சீனா, ஜப்பான் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.
போட்டியை நடத்திய ஆர்ஜெண்டீனா, 11 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 26 பதக்கங்கள் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com