மே.இ.தீவுகளுடன் ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்: மீண்டும் ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

டெஸ்ட் தொடரை போல் மேற்கிந்திய தீவுகளுடன் ஒரு நாள் ஆட்டத் தொடரையும் இந்தியா ஒயிட் வாஷ் செய்யுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மே.இ.தீவுகளுடன் ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்: மீண்டும் ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

டெஸ்ட் தொடரை போல் மேற்கிந்திய தீவுகளுடன் ஒரு நாள் ஆட்டத் தொடரையும் இந்தியா ஒயிட் வாஷ் செய்யுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை குவஹாட்டியில் தொடங்குகிறது. இதற்காக கடந்த சில நாள்களாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது இந்திய அணி.
 இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு பின் ஆசிய கோப்பை போட்டியில் கேப்டன் கோலிக்கு ஓய்வு தரப்பட்டது. அதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கிடையே தற்போது மீண்டும் கேப்டன் கோலி இடம் பெற்றுள்ளார். முதலிரண்டு ஒரு நாள் ஆட்டங்களுக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
 ரிஷப் பந்த் சேர்ப்பு: இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். தோனிக்கு அடுத்து இரண்டாவது விக்கெட் கீப்பராகவும் அவர் செயல்படுவார். இங்கிலாந்து தொடரில் அறிமுக சதம் அடித்த பந்த், மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரிலும் இரு ஆட்டங்களிலும் 92 ரன்களை குவித்தார்.
 இந்நிலையில் தற்போது ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளார். கலில் அகமது-அதே நேரத்தில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலில் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாகவிளையாடிய நிலையில் தற்போது அணியில் இணைந்துள்ளார்.காயமடைந்துள்ள ஆல்ரவுண்டர் ஹார்திக்பாண்டியாவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படாத ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவர். மிடில் ஆர்டரில் அம்பதி ராயுடு, தோனி, மணிஷ் பாண்டே ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சஹால் சுழற்பந்துவீச்சிலும், முகமது சமி, உமேஷ் யாதவ், கலில் அகமது ஆகியோர் வேகப்பந்துவீச்சிலும் கவனம் செலுத்துவர். பிரதான பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.
 அதே நேரத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு தள்ளப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர் எவின் லெவிஸ் விலகி விட்டார். ஏற்கெனவே கெயில், ரஸ்ஸல் ஆகியோரும் விலகியதால் பலமிழந்துள்ளது. கேப்டன் ஹோல்டர், சாமுவேல்ஸ், கெமர் ரோச் ஆகியோர் ஒரு நாள் தொடரில் சவாலைத் தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
 முதலிரண்டு ஆட்டங்கள் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல் ஆட்டம் 21-ஆம் தேதி குவஹாட்டியிலும், இரண்டாவது ஆட்டம் 24-ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3-ஆவது ஆட்டம் 27-ஆம் தேதி புணேவிலும், 4-ஆவது ஆட்டம் 29-ஆம் தேதி மும்பையிலும், 5-ஆவது ஆட்டம் நவம்பர் 1--இல் திருவனந்தபுரத்திலும் நடக்கிறது.
 டி20 ஆட்டங்கள்: முதல் ஆட்டம் நவம்பர் 4-ஆம் தேதி கொல்கத்தாவிலும், இரண்டாவது ஆட்டம் நவம்பர் 6-ஆம் தேதி லக்னோவிலும், மூன்றாவது ஆட்டம் நவம்பர் 11-ஆம் தேதி சென்னையிலும் நடக்கிறது. டெஸ்ட் தொடரைப் போல் ஒரு நாள் தொடரையும் இந்தியா ஒயிட் வாஷ் செய்யுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 கடுமையான ஒரு நாள் தொடர்: ஹோல்டர்
 இந்தியாவுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் கடுமையானதாக இருக்கும் என மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர் கூறியுள்ளார்.
 ஒரு நாள் ஆட்டத்திலும் சிறந்த அணியாக இந்தியா உள்ளது. அதில் பல இளம் வீரர்கள் உள்ளனர். பேட்டிங்குக்கு சாதகமான இந்திய பிட்ச்களில் 300 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என வீரர்களிடம் கூறியுள்ளேன். சீரான பேட்டிங்கும் அவசியம். எங்கள் அதிரடி வீரர் மார்லன் சாமுவேல்ஸ் தனது 200-ஆவது ஆட்டத்தில் விளையாடுகிறார்.
 ஒரு காலத்தில் தலைசிறந்த அணியாக திகழந்த நிலையில் தற்போது உலகக் கோப்பைக்கே தகுதிச் சுற்றில் விளையாடி தேர்வு பெற்றோம். 27 வயதே ஆன எனக்கு அணியை கட்டமைக்கும் பொறுப்பு உள்ளது. தற்போதுள்ள வீரர்கள் சவால்களை சந்திக்கக் கூடியவர்கள் என்றார் ஹோல்டர்.
 ராயுடுவின் சீரான ஆட்டத்தால் மிடில் ஆர்டர் பிரச்னை தீரும்: கோலி
 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத் தொடர் குறித்து கேப்டன் கோலி கூறியதாவது: 4-ஆவது நிலை பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுவின் நிலையான ஆட்டத்தால் மிடில் ஆர்டரில் நிலவி வரும் பேட்டிங் பிரச்னை தீரும். வரும் 2019 உலகக் கோப்பைக்கு முன்பு அணியில் அனைத்தும் சரி செய்யப்படும். நான்காவது நிலை பேட்ஸ்மேனை கண்டறிவதே என் முன் உள்ள சவாலாகும். தற்போது ராயுடு அதை நிவர்த்தி செய்து வருகிறார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான யோ-யோ சோதனையில் அவர் தேர்ச்சி பெறவில்லை. எனினும் ஆசிய கோப்பையில் இடம் பெற்று சிறப்பாக ஆடினார். தற்போது மிடில் ஆர்டர் பேட்டிங் பலமடைந்துள்ளது.
 உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறவுள்ள 18 ஒரு நாள் ஆட்டங்களும் மிகவும் முக்கியமானவை. தோனியின் பேட்டிங் திறன் மங்கி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது குறித்து கேட்டபோது. 5, 6, 7-ஆவது பேட்ஸ்மேனாகவும் ஆட தோனி தயாராக உள்ளார். சிலர் வேண்டும் என்றே சர்ச்சை கிளப்புவர். அண்மைக் காலமாக முதல் மூன்று பேட்ஸ்மேன்களே அணியின் ஸ்கோரில் பெரும்பகுதியை எடுக்கின்றனர். இதனால் லோயர் ஆர்டர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
 40 ஓவர்கள் வரை தொடக்க வீரர்களே ஆடினால், கடைசி ஓவர்களில் ரன்கள் எடுக்க அதிரடி வீரர்களை தான் களம் இறக்க வேண்டும். ஜாகிர் கான், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு பின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலில் அகமது இடம் பெற்றுள்ளது சிறப்பானது. இரு முனைகளிலும் ஸ்விங் செய்யும் திறன் படைத்தவர் கலில் என்றார் கோலி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com