தியோதர் கோப்பை: ஐந்து தமிழக வீரர்களுக்குத் திருப்புமுனை உண்டாகுமா?

அடுத்த வருடம் உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் புதிய வீரர்களுக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைப்பது...
தியோதர் கோப்பை: ஐந்து தமிழக வீரர்களுக்குத் திருப்புமுனை உண்டாகுமா?

தியோதர் கோப்பை போட்டி நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளது. தில்லியில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி அக்டோபர் 27 அன்று முடிவடையவுள்ளது. 

இப்போட்டிக்கான இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி என மூன்று அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியா ஏ அணிக்கு தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக், அஸ்வின்,அபினவ் முகுந்த், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஐந்து தமிழக வீரர்கள் தேர்வாகியுள்ளார்கள். அஸ்வின் இந்தியா ஏ அணியிலும் முகுந்த், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்தியா சி அணியிலும் இடம்பிடித்துள்ளார்கள். 

சமீபத்தில் இந்திய அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் நீக்கப்பட்டுள்ளார். எனினும் இந்திய அணியில் 4-ம் நிலை வீரருக்கான போட்டி இன்னமும் தொடர்கிறது. ராயுடு தோல்வியடைந்தால் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் மீண்டும் நுழைய வாய்ப்புண்டு. எனவே அவருக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியம் என்று சொல்லலாம். 

அஸ்வின் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இந்திய ஒருநாள் அணியில் விளையாடவில்லை. ஆனால் அவருடன் சேர்ந்து இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட ஜடேஜா, மீண்டும் உள்ளே வந்துவிட்டார். இந்நிலையில் இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினால் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க தேர்வுக்குழு முன்வரும். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் உலகக் கோப்பையில் அஸ்வினால் இடம்பெறமுடியாமல் போகலாம்.

28 வயது அபினவ் முகுந்த், விஜய் ஹசாரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் ராகுலுக்குச் சரியான வாய்ப்புகள் அமைவதில்லை. ரஹானே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பிருத்வி ஷா-வை அணியில் சேர்க்க முயன்றாலும் அவருக்கான இடமில்லை என்பதே உண்மை. தொடக்க வீரர்களுக்கான போட்டி இந்தளவுக்குக் கடுமையாக இருக்கும்போது இதில் முகுந்துக்கு எப்படி வாய்ப்பளிக்க முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், தியோதர் கோப்பை-யிலும் முகுந்த் சிறப்பாக விளையாடினால், ஏதோவொரு கட்டத்தில் அவர் இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புண்டு. 

பாண்டியாவுக்கு அடுத்ததாக விஜய் சங்கர் மீது நம்பிக்கை வைத்துள்ளது பிசிசிஐ. பாண்டியா போல பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் பங்களிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை விஜய் சங்கர் எந்தளவுக்கு ஈடு கட்டுவார் என்று தெரியவில்லை. ஆனால் திறமையை வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புண்டு. 

வாஷிங்டன் சுந்தர் மீது தேர்வுக்குழுவுக்கு நல்ல நம்பிக்கை உண்டு. ஆனால் முக்கியமான கட்டங்களில் காயமடைந்து விடுகிறார். குல்தீப் யாதவ், சஹாலுக்கு அடுத்த இடத்தில் வாஷிங்டன் வரவேண்டுமென்றால் அவருக்கு இந்தப் போட்டி முக்கியம். ஆல்ரவுண்டராகவும் பங்களிக்க முடியும் என்பதால் ஜடேஜாவுக்கும் அழுத்தம் தரமுடியும்.

அடுத்த வருடம் உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் புதிய வீரர்களுக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைப்பது கடினம். எனினும் ஒரு போட்டியை உருவாக்கி, அதன்மூலமாக இந்திய அணிக்குள் மீண்டும் நுழையமுடியும். ஐபிஎல்-லுக்கு முன்பு ராயுடு குறித்து யாரும் பேசவில்லை. ஆனால் தற்போது, அடுத்த வருட உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு அவர் தயாராக உள்ளார். நிலைமை எப்படி மாறும் என யாராலும் கணிக்கமுடியாது. எனவே இந்த ஐந்து தமிழக வீரர்களுக்கும் தியோதர் கோப்பை ஆட்டங்களை நன்குப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதன்மூலம் ஒரு திருப்புமுனையாக அமைய வாய்ப்புண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com