இந்தியா அதிரடி வெற்றி 326/2

முதல் ஒரு நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
இந்தியா அதிரடி வெற்றி 326/2

முதல் ஒரு நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
 முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களை குவித்தது. ஷிம்ரன் ஹெட்மயர் அபாரமாக ஆடி 106 ரன்களை விளாசினார். பின்னர் ஆடிய இந்தியா 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 326 ரன்களை எடுத்து வென்றது. ரோஹித் சர்மா 152, கோலி 140 ரன்களை குவித்தனர்.
 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் குவஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது.
 இதையடுத்து மே.இந்திய தீவுகளின் கீய்ரன் பொவல்-சந்தர்பால் ஹேம்ராஜ் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.சந்தர்பால் 9 ரன்களுக்கு சமி பந்தில் வெளியேறினார். 2 சிக்ஸர், 6 பவுண்டரயுடன்39 பந்துகளில் 51 ரன்களுடன் பொவலும், ஷேய் ஹோப் 32 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
 ஷிம்ரன் ஹெட்மயர் 106
 அதிரடி வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் சஹால் பந்தில் எல்பிடபிள்யு ஆனார்.
 பின்னர் ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பொவல் இணை சேர்ந்து ரன்களை குவித்தது. 4 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்த ரோவ்மன், ஜடேஜா பந்தில் போல்டானார். அவருக்கு பின் தலா 6 சிக்ஸர், பவுண்டரியுடன் 78 பந்துகளில் 106 ரன்களை குவித்த ஹெட்மயர், ஜடேஜா பந்தில் வெளியேறினார்.
 கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 5 பவுண்டரியுடன் 38 ரன்களுக்கு சஹால் பந்தில் போல்óடானார். ஆஷ்லி நர்ஸ் வெறும் 2 ரன்களுக்கு வெளியேறினார். அப்போது 43.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை மேற்கிந்திய தீவுகள் எடுத்திருந்தது.
 பின்னர் தேவேந்திர பிஷு, கெமர் ரோச் ஆகியோர் 8-ஆவது விக்கெட்டுக்கு நிலைத்து ஆடி அணியின் ஸ்கோர் உயர வகை செய்தனர்.
 3 பவுண்டரியுடன் பிஷு 22 ரன்களையும், 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் ரோச் 26 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு மேற்கிந்திய தீவுகள் அணி 322 ரன்களை எடுத்தது.
 சஹால் அபாரம்
 இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய சஹால் 3-44, முகமது சமி 2-81. ஜடேஜா 2-65, கலில் அகமது 1-64 விக்கெட்டை வீழ்த்தினர்.
 323 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய தரப்பில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் களமிறங்கினர். ஆனால் துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. மூன்றாவது ஓவரின் போது 4 ரன்கள் எடுத்த தவன், ஓஷேன் தாமஸ் பந்தில் போல்டானார். பின்னர் ரோஹித்-கேப்டன் கோலி இணை ரன்களை குவித்தது. இதனால் 15.1 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை கடந்தது.
 விராட் கோலி 36-ஆவது ஒரு நாள் சதம்
 கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடி 88 பந்துகளில் சதமடித்தார்.
 இதன் மூல் தனது 36-ஆவது ஒரு நாள் சதத்தை எடுத்தார்.
 29-ஆவது ஓவரின் போது ரோஹித்-கோலி இணை சேர்ந்து 164 பந்துகளில் 200 ரன்களை விளாசி இருந்தது.
 ரோஹித் சர்மா 20-ஆவது சதம்
 விராட் கோலியைத் தொடர்ந்து 84 பந்துகளில் தனது 20-ஆவது ஒரு நாள் சதத்தை எடுத்தார் ரோஹித்.
 இதன் மூலம் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றார்.
 2 சிக்ஸர், 21 பவுண்டரியுடன் 107 பந்துகளில் 140 ரன்கள் விளாசிய கோலி, தேவேந்திர பிஷு பந்துவீச்சில் ஷேய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 246 ரன்கள் சேர்த்த கோலி-ரோஹித் இணை
 அப்போது 33 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. ரோஹித்-கோலி இணை 246 ரன்களை சேர்த்தது.பின்னர் ரோஹித்-அம்பதி ராயுடு இணை சேர்ந்து ரன்களை விளாசியது. 7.5 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 42.1 ஓவரின் போது 2 விக்கெட்டை இழந்து இந்தியா 326 ரன்களை எடுத்து வென்றது.
 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...
 துணை கேப்டன் ரோஹித் சர்மா 8 சிக்ஸர், 15 பவுண்டரியுடன் 117 பந்துகளில் 152 ரன்களை குவித்தும், அம்பதி ராயுடு 22 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் பிஷு, ஓஷேன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒரு நாள் ஆட்டத்தை இந்தியா வென்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
 கோலி புதிய சாதனை
 விராட் கோலி 35 பந்துகளில் தனது 49-ஆவது அரைசதத்தை அடித்தார். இதன் மூலம் புதிய சாதனையை படைத்தார். நிகழாண்டில் 2018-இல் 2000 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். கடந்த 2016, 2017-இலும் 2000 ரன்களை கடந்த கோலி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இச்சாதனையை நிகழ்த்தி உள்ளார். மூன்று வீரர்கள் மட்டுமே தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தவர்கள் ஆவர். (டெண்டுல்கர் 1996-98), மேத்யூ ஹைடன் (2002-04), ஜோ ரூட் (2015-17). மேலும் 5-ஆவது முறையாக கோலி ஓரே ஆண்டில் 2000 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக இலங்கை வீரர் சங்ககரா 6 ஆண்டுகளில் 2000 ரன்களை எடுத்துள்ளார்.
 மேலும் கோலி-ரோஹித் இணை 50 ஓவர் ஆட்டங்களில் 15-ஆவது முறையாக 100 ரன்களை சேர்த்துள்ளது. செüரவ் கங்குலி-சச்சின் இணையே 26 முறை 100 ரன்களை சேர்த்து முதலிடத்தில் உள்ளது.
 ஷிம்ரன் சாதனை
 74 பந்துகளில் சதமடித்த மேற்கிந்திய வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
 16 இன்னிங்ஸில் தனது முதல் மூன்று சதங்களை ரிச்சர்ட்ஸ் பெற்றிருந்தார். ஆனால் 13 இன்னிங்ஸ்களிலேயே ஷிம்ரன் தனது முதல் மூன்று சதத்தை எடுத்துள்ளார்.
 200-ஆவது ஆட்டத்தில் டக் அவுட்
 மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் மார்லன் சாமுவேல்ஸ் தனது 200-ஆவது ஆட்டத்தில் பங்கேற்று விளையாடினார். ஆனால் அவர் ஸ்கோர் கணக்கை தொடங்குவதற்கு முன்னரே சஹால் பந்தில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறி அதிர்ச்சி அடைந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com