தியோதர் கோப்பை: தினேஷ் கார்த்திக் 99 ரன்கள் எடுத்தும் தோல்வியைச் சந்தித்த இந்திய ஏ அணி!

இந்தியா ஏ அணி 46.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது... 
தியோதர் கோப்பை: தினேஷ் கார்த்திக் 99 ரன்கள் எடுத்தும் தோல்வியைச் சந்தித்த இந்திய ஏ அணி!

தியோதர் கோப்பை போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது. தில்லியில் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 27 அன்று முடிவடையவுள்ளது. 

இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பி அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் நடுவரிசை வீரர்கள் நன்கு விளையாடியதால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 46, ஸ்ரேயஸ் ஐயர் 41, மனோஜ் திவாரி 52 ரன்கள் எடுத்தார்கள். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள விஹாரி 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்தியா ஏ அணிக்குச் சரியான தொடக்கம் அமையவில்லை. அந்த அணி 87 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக்கும் அஸ்வினும் நிலைத்து நின்று சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். இந்த ஜோடி அணிக்கு வெற்றியைத் தேடித் தரும் என்கிற நம்பிக்கையை உருவாக்கியது. 210 ரன்கள் வரை நீடித்த இந்த ஜோடி, அஸ்வினின் தவறால் பிரிந்தது. மார்கண்டே பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி 54 ரன்களில் ஆட்டமிழந்தார் அஸ்வின். அடுத்த ஓவரிலேயே சதமடிக்க முடியாமல் 99 ரன்களில் ஆட்டமிழந்தார் தினேஷ் கார்த்திக். இருவருமே வெளியேறிய பிறகு, மீதமுள்ள மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியா பி அணிக்கு நீண்ட நேரம் ஆகவில்லை. 

இந்தியா ஏ அணி 46.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்கண்டே 4 விக்கெட்டுகளும் நதீம் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்கள். 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது இந்தியா பி அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com