ஐசிசி 2023 உலகக் கோப்பை போட்டிக்கு புதிய முறையில் அணிகள் தேர்வு

இந்தியாவில் வரும் 2023-இல் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை போட்டிக்கு புதிய முறையில் அணிகள் தேர்வு
ஐசிசி 2023 உலகக் கோப்பை போட்டிக்கு புதிய முறையில் அணிகள் தேர்வு


இந்தியாவில் வரும் 2023-இல் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை போட்டிக்கு புதிய முறையில் அணிகள் தேர்வு செய்யப்பட உள்ளன.
இதற்கு சிங்கப்பூரில் நடைபெற்ற ஐசிசி குழுக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறையில் இருந்து அணிகள் தேர்வு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள தகுதிச் சுற்றில் 32 அணிகள் பங்கேற்கும். வரும் ஜூலை 2019 முதல் தொடங்கி 2022 மே மாதம் வரை நடைபெறும் தகுதிச் சுற்றில் 372 ஆட்டங்கள் இடம் பெறும். 
இதில் இருந்து 8 அணிகள் சிடபிள்யுசி சூப்பர் லீகில் இருந்தும், 13 அணிகள் நேரடியாக தகுதி பெறும். 
மீதமுள்ள கீழ்நிலை அணிகள் சிடபிள்யுசி தகுதி ஆட்டங்கள் மூலம் தேர்வு செய்யப்படும். இப்புதிய முறையின்படி 7 இணை உறுப்பினர்கள் அதிக ஒரு நாள் ஆட்டங்களில் விளையாட முடியும்.
எனினும் வரும் 2019-இல் நடைபெறவுள்ள இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டிகள் 10 அணிகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். ஆனால் கூடுதல் அணிகள் சேர்க்கை குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
2019 உலகக் கோப்பையில் வெறும் 10 அணிகள் மட்டுமே என அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டதற்கு ஐசிசிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். 
இணை உறுப்பினர்கள் இந்த முடிவால் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் 2023 ஆண்டுக்கான அணிகள் தேர்வு முறை, கூடுதல் அணிகள் போன்றவை முந்தைய கோரிக்கைகளை தீர்ப்பதாக அமையும் என ஐசிசி சிஇஓ டேவ் ரிச்சர்டஸன் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக கிரிக்கெட் லீக் போட்டி இணை உறுப்பினர் நாடுகளில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனினும் மேலும் அதிக ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
புதிய அமைப்பு முறை ஐசிசி உறுப்பினர்களுக்கு அதிக ஆட்ட வாய்ப்பையும், திறனையும் மேம்படுத்த உதவும். இந்த தகுதிச் சுற்று இரண்டரை ஆண்டுகளில் முடிவடைந்து விடும். முன்பு இது 6 ஆண்டுகளாக இருந்தது. தற்போது உலகக் கோப்பைக்கு தகுதி பெற விழையும் அணிகளுக்கு சீரான வழிமுறையாகும். புதிய முறை 32 அணிகளில் கடைநிலையில் உள்ள அணிக்கு கூட உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிட்டும் வகையில் உள்ளது. இதனால் கூடுதல் ஒரு நாள், ஏ கிரேட் ஆட்டங்களில் பங்கேற்க இயலும்.
ஆனால் டெஸ்ட் தகுதி கிடைப்பது புதிய அணிகளுக்கு குதிரைக் கொம்பாக இருக்கும். இன்டர்காண்டினென்டல் கோப்பை போட்டியில் விளையாட விருப்பமா என உறுப்பினர்களிடம் கருத்தறியப்படும்.
பல நாள் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர். இதனால் இன்டர்காண்டினென்டல் கோப்பை, மற்றும் உலக கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் போன்றவற்றில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பாக ஐசிசி முடிவெடுக்கும்.
மகளிர் உலகக் கோப்பை: ஒரு நாள் தகுதி கொண்ட 10 அணிகளும் அடுத்த ஐசிசி மகளிர் சாம்பியன் போட்டியில் இடம் பெறும். தற்போது டாப் 8 அணிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. வங்கதேசம், அயர்லாந்து அணிகள் இதனால் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. 
வரும் 2021 மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு தேர்விலும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. நேரடியாக 5 அணிகள் தகுதி பெறும். இது 8 அணிகள் பங்கேற்கும் போட்டியாக இருக்கும்.
மேலும் ஐந்து ஐசிசி பிராந்தியங்களில் இருந்தும் மகளிர் உலகக் கோப்பை, மகளிர் டி20 தகுதிச் சுற்று போட்டிகளில் முதலிடம் பெறும் அணி தகுதி பெறும். மேலும் 2017-20 ஐசிசி மகளிர் சாம்பியன் போட்டியில் கடைசி 3 இடங்களைப் பெற்ற அணிகள், வங்கதேசம், அயர்லாந்து, மற்றும் பிராந்திய வின்னர் அணிகள் மீதமுள்ள இடங்களுக்கு போட்டியிடும். இந்த முடிவுகள் ஐசிசி குழுக் கூட்டத்தில் எடுக்கப்ட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com