ரோஹித் சர்மா 162, ராயுடு 100 ரன்கள்: மே.இ. அணிக்கு 378 ரன்கள் இலக்கு!

ரோஹித் சர்மாவும் ராயுடுவும் 3-வது விக்கெட்டுக்கு 211 ரன்கள் கூட்டணி அமைத்து இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவி...
ரோஹித் சர்மா 162, ராயுடு 100 ரன்கள்: மே.இ. அணிக்கு 378 ரன்கள் இலக்கு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ராயுடு ஆகியோர் சதமடித்துள்ளார்கள். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்துள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. மேலும் ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. புணேயில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரிஷப் பந்துக்குப் பதிலாக கெதர் ஜாதவும் சாகலுக்குப் பதிலாக ஜடேஜாவும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மே.இ. அணியில் மெக்காய்க்குப் பதிலாக கீமோ பால் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணிக்கு  ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். ஆனால் நன்கு விளையாடி வந்த தவன் எதிர்பாராதவிதமாக 38 ரன்களில் கீமோ பால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மீண்டும் சதமடித்து உலக சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் எதிர்பாராதவிதமாக 16 ரன்களில் ரோச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  இதனால் உலக சாதனை நிகழ்த்தும் வாய்ப்பை அவர் இழந்தார் கோலி. இந்தமுறையும் கோலியின் சதத்தையும் உலக சாதனையையும் எதிர்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.

அசத்திய ரோஹித் - ராயுடு கூட்டணி

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும் ராயுடுவும் பலமான கூட்டணி அமைத்தார்கள். ரோஹித் சர்மா 60 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இருவரும் முதலில் 60 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்தார். இதன்பின்பு, தொடர்ந்து நன்கு விளையாடி வந்த ரோஹித் சர்மா, 98 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் தனது 21-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ரோஹித் - ராயுடு கூட்டணி 99 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தது. இதன்பிறகு ராயுடு 51 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். 

இந்திய அணி 38.4 ஓவர்களில் 250 ரன்களை எட்டியது. இதனால் இந்திய அணி எப்படியும் 325 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 50 ரன்கள் வெகு விரைவாகக் கிடைத்தது. 42.4 ஓவர்களிலேயே 300 ரன்களை எட்டியது இந்திய அணி. 131 பந்துகளில் 3 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 150 ரன்களை எட்டிய ரோஹித் சர்மா மீண்டும் 200 ரன்களை எட்டுவார் என எண்ணியிருந்த நிலையில் 44-வது ஓவரில் 162 ரன்களில் நர்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் இரண்டாவது முறையாக ஏமாற்றம் அடைந்தார்கள். ரோஹித் சர்மாவும் ராயுடுவும் 3-வது விக்கெட்டுக்கு 211 ரன்கள் கூட்டணி அமைத்து இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவி செய்தார்கள்.

இதன்பிறகு ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 51 பந்துகளில் அரை சதத்தை எட்டிய ராயுடு, விரைவாக ரன்கள் சேர்த்து 80 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது 3-வது ஒருநாள் சதத்தை எடுத்தார். கடைசி 3 ஓவர்களில் மேலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எண்ணியிருந்த நிலையில் கூடுதலாக ரன் எதுவும் சேர்க்காமல் ரன்  அவுட் ஆகி வெளியேறினார் ராயுடு. 2 பவுண்டரிகள் அடித்த தோனி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக வந்த ஜடேஜாவும் ஜாதவும் பந்துகளை வீணடிக்காமல் விரைவாக ரன்கள் சேர்த்தார்கள். இதனால் 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்தது. ஜாதவ் 16, ஜடேஜா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com