டி20 ஆட்டங்களில் நிறைவடைந்தது தோனியின் சகாப்தம்

ரசிகர்களின் அதிகபட்ச வரவேற்பைப் பெற்ற கிரிக்கெட்டின் மூன்று ஆட்ட முறைகளில் ஒன்றான டி20-இல் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சகாப்தம் நிறைவை எட்டியுள்ளது.
டி20 ஆட்டங்களில் நிறைவடைந்தது தோனியின் சகாப்தம்

ரசிகர்களின் அதிகபட்ச வரவேற்பைப் பெற்ற கிரிக்கெட்டின் மூன்று ஆட்ட முறைகளில் ஒன்றான டி20-இல் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சகாப்தம் நிறைவை எட்டியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரான கேப்டனாக விளங்கினார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தோனி. விக்கெட் கீப்பிங் மற்றும் அதிரடி பேட்டிங்கில் சிறந்தவர் என பெயரெடுத்த தோனி, குறிப்பாக ஆட்டத்தின் கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக ஆடி வெற்றிகளை தேடித் தருவதில் நிபுணத்துவம் பெற்றவர்.
இந்தியாவுக்கு உலகக் கோப்பை (2011), டி20 உலகக் கோப்பை (2007), சாம்பியன்ஸ் கோப்பை (2013) பட்டங்களை பெற்றுத் தந்த சாதனைக்கு உரியவர் தோனி. இந்த மூன்று கோப்பைகளையும் வென்ற ஓரே கேப்டன் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. மேலும் 27 டெஸ்ட்களில் இந்திய அணிக்கு வெற்றியை ஈட்டியுள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுத் தந்தவர்.
90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்களையும், 330 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடி 10,123 ரன்களையும், 93 டி20 ஆட்டங்களில் விளையாடி 1487 ரன்களையும் எடுத்துள்ளார் தோனி. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆஸி. அணிக்கு எதிராக கடந்த 2014 டிசம்பரில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி. பின்னர் ஒரு நாள் ஆட்டம், டி20 ஆட்டங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் அண்மைக்காலமாக தோனியின் பேட்டிங் திறன் சோபிக்கவில்லை. இதனால் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
37 வயதான நிலையில் அவரால் முன்பு போல் விளையாட முடியவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறினர். தோனி கடைசியாக கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து எதிராக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் விளையாடி இருந்தார்.
இதற்கிடையே தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் அவர், டி20 தொடருக்கான அணியில் நீக்கப்பட்டுள்ளார். அதே போல் வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டி20 தொடருக்கான அணியிலும் சேர்க்கப்படவில்லை.
இது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வாளர் குழுத் தலைவர் எம்எஸ்கே.பிரசாத் முதலில் தோனிக்கு தற்காலிகமாக ஓய்வு தான் தரப்பட்டது எனக் கூறினார். பின்னர் அதை மாற்றி டி20 ஆட்டங்களில் தோனி இனி சேர்க்கப்பட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் என தேர்வுக் குழு கருதியதாக கூறினார்.
மேலும் வரும் 2020இல் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டி வரை தோனியால் தொடர்ந்து ஆட முடியாது. இதனால் விக்கெட் கீப்பர்களாக தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தோனியின் பேட்டிங்கும் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. அவரது பேட்டிங் சராசரி 25.20 ஆகும். ஒரு நாள் ஆட்டங்களில் கூட ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் நிலை சிக்கலாகி விட்டது. 
நிகழாண்டு நடைபெற்ற ஒரு நாள் ஆட்டங்களில் தோனி வெறும் 2 சிக்ஸர்களை மட்டுமே விளாசினார். 18 ஆட்டங்களில் 252 ரன்களையே எடுத்தார். கடந்த 2016-க்கு பின் தோனி பேட்டிங் சராசரி தற்போது தான் 40-க்கு கீழே சென்று விட்டது.
இதற்கிடையே தோனியின் அனுபவம் மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படும் என்பதால் வரும் 2019 ஒரு நாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் நீடிப்பார் எனத்தெரிகிறது.
டி20 ஆட்டங்களில் தோனியின் சகாப்தம் நிறைவுக்கு வந்து விட்ட நிலையில் 50 ஓவர் ஒரு நாள் ஆட்டங்களில் என்ன செய்வது என்பது தொடர்பான முடிவை தோனியின் வசமே தேர்வுக் குழு விட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com