இந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு ஐபிஎல் காரணம்: கவாஸ்கர் குற்றச்சாட்டு

ஐபிஎல் போட்டிக்குப் பிறகு இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டால் வீரர்கள் கவலைப்படுவதில்லை...
இந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு ஐபிஎல் காரணம்: கவாஸ்கர் குற்றச்சாட்டு

5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இறுதி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கும், இந்தியா 292 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின.

இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வீரர்கள் அலிஸ்டர் குக் 147, கேப்டன் ஜோ ரூட் 125 ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். இதன் மூலம் இந்தியாவைக் காட்டிலும் 464 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்திருந்தது. தவன் 1, புஜாரா, கோலி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ராகுல் 46, ரஹானே 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வெற்றி பெற இந்தியாவுக்கு 406 ரன்கள் தேவைப்படுகின்றன.

சோனி தொலைக்காட்சியில் வர்ணனையாளராகவும் கிரிக்கெட் நிபுணராகவும் பணியாற்றும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் நிலைமை குறித்துக் கூறியதாவது: 

வெளிநாடுகளில் இந்திய அணி மோசமாக விளையாடுவதற்கு ஐபிஎல் தான் காரணம். ஐபிஎல் போட்டிக்குப் பிறகு இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டால் வீரர்கள் கவலைப்படுவதில்லை. நான் ரன்கள் எடுக்காவிட்டால் என்ன, எனக்குத்தான் ஐபிஎல் உள்ளதே என எண்ணுகிறார்கள். ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன்பு, அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்கள், ரஞ்சிப் போட்டியில் விளையாடுவார்கள். அல்லது 9-5 வேலையில் ஈடுபடுவார்கள். இப்போது அவர்கள் வசம் ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் போட்டிக்கு முன்பு 2007-ல் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது. அதற்குப் பிறகு ஒருமுறைகூட ஜெயிக்கவில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com