ஆசிய கோப்பை: ஹாங்காங்கை போராடி வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.
ஆசிய கோப்பை: ஹாங்காங்கை போராடி வீழ்த்தியது இந்தியா


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹாங்காங் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வீழ்ந்தது.
முன்னதாக டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த இந்தியாவில் வழக்கமான ரோஹித் சர்மா - ஷிகர் தவன் கூட்டணி களம் கண்டது. இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் 7.4-ஆவது ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 
அடுத்து வந்த அம்பட்டி ராயுடு, தவனுடன் கைகோத்தார். இந்த கூட்டணி அருமையாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. இந்நிலையில் தவன் 57 பந்துகளில் அரைசதம் கடந்தார். 19.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. ராயுடு அரைசதம் தொட்டார்.
இச்சூழலில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 60 ரன்களில் ராயுடு ஆட்டமிழந்தார். தவன்-ராயுடு கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது. அடுத்து தினேஷ் கார்த்திக் களம் கண்டார்.
36.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது இந்தியா. இதனிடையே, 40.4-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார் தவன். 120 பந்துகளை சந்தித்த அவர் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 127 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து வந்த தோனி மூன்றே பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 33, புவனேஷ்வர் குமார் 9 ரன்களில் வீழ, ஷர்துல் தாக்குர் டக் அவுட்டானார். 50 ஓவர்கள் முடிவில் கேதார் ஜாதவ் 28, குல்தீப் யாதவ் ரன்களின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஹாங்காங் தரப்பில் கிஞ்சித் ஷா 3, எஸான் கான் 2, எஸான் நவாஸ், ஐஸாஸ் கான் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.
286 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹாங்காங்கில் தொடக்க வீரர் நிஸாகத் கான் 92 ரன்கள் அடித்தார். உடன் வந்த கேப்டன் அன்ஷுமன் ராத் 73 ரன்கள் விளாசினார். எஞ்சிய 6 விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன.

சுருக்கமான ஸ்கோர்
இந்தியா
50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285
தவன்-127, ராயுடு-60, தினேஷ்-33, கேதார்-28*, குல்தீப்-*
பந்துவீச்சு: 
கிஞ்சித் 3, எஸான் 2
ஹாங்காங்
50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 259
நிஸாகத்-92, 
அன்ஷுமன்- 73, 
தன்வீர்-12*, நவாஸ்-2*
பந்துவீச்சு: 
சாஹல்-3/46, அகமது-3/48

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com