பாகிஸ்தானின் இழப்பீடு வழக்கு விசாரணை: பிரிட்டன் வழக்குரைஞரை நியமித்தது பிசிசிஐ

இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழப்பீடு கோரி தொடுத்துள்ள வழக்கில் வாதாடுவதற்காக,
பாகிஸ்தானின் இழப்பீடு வழக்கு விசாரணை: பிரிட்டன் வழக்குரைஞரை நியமித்தது பிசிசிஐ


இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழப்பீடு கோரி தொடுத்துள்ள வழக்கில் வாதாடுவதற்காக, துபையைச் சேர்ந்த சட்டச் சேவைகள் நிறுவனத்தையும், பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞரையும் பிசிசிஐ நியமித்துள்ளது.
முன்னதாக பிசிசிஐ, துபையில் உள்ள தனது சட்டக் குழுவுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தது. அதில் பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளதரி, பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதில் மேற்கொண்ட முடிவின்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வழக்கை வாதாட பிசிசிஐ சார்பில், துபையைச் சேர்ந்த ஹெர்பர்ட் ஸ்மித் ஃப்ரீஹில்ஸ் சட்ட நிறுவனத்தையும், பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கியூசி இயான் மில்ஸையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடுத்துள்ள அந்த இழப்பீடு வழக்கின் விசாரணை அக்டோபர் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 6 இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும். ஆனால், அத்தகைய தொடர்களில் இந்தியா விளையாடுவதில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், பிசிசிஐ ரூ.447 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும்' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடுத்துள்ள வழக்கில் கூறப்பட்டுள்ளது.
எனினும், எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லைப் பகுதியில் அத்துமீறிய ராணுவ தாக்குதல் ஆகிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தும் வரையில் அந்நாட்டுடன் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என்ற மத்திய அரசின் முடிவின் பேரில், பிசிசிஐ பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட் தொடர்புகளை ரத்து செய்துள்ளது.
எனினும், ஐசிசி சார்பில் நடைபெறும் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com