இந்தியாவுக்குச் சாதகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணை: பாகிஸ்தான், இலங்கை கேப்டன்கள் விமரிசனம்!

லீக் சுற்றுகளில் இந்திய அணி எந்த இடத்தை வகித்தாலும் ஏ1 என்கிற நிலையில்தான் சூப்பர் ஃபோர் சுற்றில்
இந்தியாவுக்குச் சாதகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணை: பாகிஸ்தான், இலங்கை கேப்டன்கள் விமரிசனம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு நாடுகளின் துபை, அபுதாபி நகரங்களில் தொடங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன.

இப்போட்டியை நடத்தும் உரிமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கிடைந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட முடியாத நிலை உள்ளது. இதனால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2018 நடத்தும் உரிமையை ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வழங்கியது பிசிசிஐ.

இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் லீக் ஆட்டங்களில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் (நான்கு )அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றில் விளையாடவுள்ளன. ஒவ்வொரு அணிக்கும் தலா மூன்று ஆட்டங்கள் கிடைக்கும். அதன்பிறகு சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிசுற்றுக்குத் தகுதி பெறும். இதில் இந்திய அணிக்குச் சாதகமாக போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை உருவாகியுள்ளது.

லீக் சுற்றுகளில் இந்திய அணி எந்த இடத்தை வகித்தாலும் ஏ1 என்கிற நிலையில்தான் சூப்பர் ஃபோர் சுற்றில் விளையாடவுள்ளது. வங்கதேச அணி லீக் சுற்றில் முதல் இடம் வகித்தாலும் அந்த அணி பி2 தான். இதனால் என்ன பிரச்னை என்றால் சூப்பர் ஃபோர் சுற்றில் அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டியுள்ளது. 

இதற்கு வங்கதேச அணி கேப்டன் மஷ்ரஃப் மொர்டசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்த அட்டவணை வருத்தமளிக்கிறது. முட்டாள் கூட இதற்கு வருத்தப்படுவான். கடைசி லீக் ஆட்டம் விளையாடும் முன்பே எங்களுக்கு இரண்டாம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயித்தாலும் தோற்றாலும் இரண்டாம் இடம் என்றால் எப்படி? என்று கூறியுள்ளார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி தனது அனைத்து ஆட்டங்களையும் துபையில் மட்டுமே விளையாடுகிறது. ஆனால் இதர அணிகள் துபை, அபுதாபி என இரு இடங்களில் விளையாடவேண்டியுள்ளது. இதை பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஷ் அஹமது விமரிசனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:

லீக் ஆட்டங்களில் இந்திய அணி தோற்றாலும் ஜெயித்தாலும் அவர்கள் எல்லா ஆட்டங்களையும் துபையில் மட்டுமே விளையாடுகிறார்கள். ஒன்றரை மணி நேரப் பயணமும் வெயிலும் வீரர்களுக்குச் சிரமத்தை அளிக்கின்றன. அபுதாபியில் ஆட்டங்கள் நடைபெறுகிறது என்றால் அங்கு அனைத்து அணிகளும் விளையாடவேண்டும். ஆட்ட விதிமுறை என்பது எல்லா அணிகளுக்கும் சமமாக இருக்கவேண்டும். எதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இதுபோல ஒரு போட்டி அட்டவணையைத் தயார் செய்தார்கள் எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். 

சூப்பர் ஃபோர் சுற்றில் வெள்ளியன்று, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. ஞாயிறன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதவுள்ளன. அதன்பிறகு, செவ்வாய் அன்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா. அடுத்த வார வெள்ளியன்று துபையில் இறுதிச்சுற்று நடைபெறுகிறது. இதனால் இந்திய அணி, இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் பட்சத்தில், இந்தப் போட்டியில் தனது ஆட்டங்கள் அனைத்தையும் துபையில் மட்டுமே விளையாடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com