பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா: புவனேஸ்வர், ஜாதவ் அபாரம்

பரம வைரியான பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா: புவனேஸ்வர், ஜாதவ் அபாரம்


பரம வைரியான பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய பாக். அணி 162 ரன்களில் ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 164 ரன்களை எடுத்து வென்றது.
ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக பரம வைரிகளான இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் ஆட்டம் புதன்கிழமை மாலை துபையில் நடைபெற்றது. பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றிருந்தது.
அதே நேரத்தில் இந்தியா போராடி தான் ஹாங்காங் அணியை வெல்ல முடிந்தது. இந்நிலையில் குழுவில் முதலிடம் பெறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான ஆட்டம் இந்திய-பாக். அணிகள் இடையில் நடைபெற்றது. இரு நாடுகள் இடையிலான ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அனல் பறக்கும் என்பதால் அரங்கம் முழுமையாக நிரம்பி இருந்தது. 
இந்திய அணியில் கலில் அகமது, சர்துல் தாகூர் நீக்கப்பட்டு, ஜஸ்ப்ரீத் பும்ரா, பாண்டியா சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 
தொடக்கமே அதிர்ச்சி: அந்த அணியின் இமாம் உல் ஹக், பாக்கர் ஸமான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் தொடக்கமே அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது. இமாம் 2, பாக்கர் ரன் ஏதுமின்றியும் புவனேஸ்வர்குமார் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். 4.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு வெறும் 3 ரன்களையே பாகிஸ்தான் எடுத்திருந்தது. 
சுழலில் சுருண்ட பாக்.:
பின்னர் வந்த பாபர் ஆஸம், ஷோயிப் மாலிக் ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேகரித்தனர். 13-ஆவது ஓவர் முடிவில் 50 ரன்களை பாக். அணி கடந்தது. 6 பவுண்டரியுடன் பாபர் ஆஸம் 47 ரன்களை எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் போல்டாகி வெளியேறினார். 
அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே 24.5 ஓவரின் போது பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 6 ரன்களுக்கு கேதர் ஜாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் அடித்த பந்தை இந்திய வீரர் மணிஷ் பாண்டே அற்புதமாக கேட்ச் பிடித்தார். 
அப்போது பாக். அணி 4 விக்கெட்டை இழந்து 96 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. 27-ஆவது ஓவர் முடிவில் தான் 100 ரன்களை கடந்தது.
இருமுறை தப்பிய ஷோயிப்:
ஆனால் ஷோயிப் மாலிக் தொடர்ந்து நீடிக்கவில்லை. 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்த அவர் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஷோயிப் மாலிக் இருமுறை அடித்த பந்துகளை கேட்ச் பிடிக்காமல் தோனி, புவனேஸ்வர் ஆகியோர் கோட்டை விட்டனர்.
அவருக்கு பின் அஸிப் அலி 9 ரன்களுக்கும், ஷதாப் கான் 8 ரன்கள் எடுத்த நிலையில் கேதர் ஜாதவ் பந்து வீச்சில் வெளியேறினர். பாக். அணி அப்போது 32.6 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 127 ரன்களையே எடுத்திருந்தது.
புவனேஸ்வர், கேதார் ஜாதவ் அபாரம்:
பஃஹீம் அஷ்ரப் 21, கடைசியில் ரன்களை சேர்க்க முயன்றாலும், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெளியேறினார். ஹாஸன் அலி 1 ரன்னுடன் புவனேஸ்வர், உஸ்மான் கான் ரன் ஏதுமின்றியும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து பாக். அணி 162 ரன்களுடன் சுருண்டது. முகமது ஆமீர் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய வீரர்கள் புவனேஸ்வர் 3-15, கேதர் ஜாதவ் 3-23 ஆகியோர் அபாரமாக பந்து வீசினர். பும்ரா 2, சஹால் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ரோஹித் சர்மா விஸ்வரூபம்:
163 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். 
இருவரும் பொறுப்புடன் ஆடி ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். 9-ஆவது ஓவர் முடிவில் ஸ்கோர் 50-ஐ கடந்தது.
3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 52 ரன்களை எடுத்த கேப்டன் ரோஹித் சர்மா, ஷதாப் கான் பந்துவீச்சில் போல்டானார்.
அப்போது 1 விக்கெட் இழப்புக்கு இந்தியா 86 ரன்களை எடுத்திருந்தது.
ஹார்திக் பாண்டியா காயம்: ஆட்டத்தின் 17ஆவது ஓவர் முடிவில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கடைசி பந்தை வீசியபோது கீழே விழுந்தார். இதில் இடுப்பில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்துக்கு ஸ்டெரச்சர் கொண்டு வரப்பட்டு பாண்டியா அழைத்துச் செல்லப்பட்டார். பாண்டியா காயமடைந்தது இந்திய அணிக்கு சுற்று பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
இந்தியா அபார வெற்றி: 16.3 ஓவரின் போது பாஹிம் அஷ்ரப் வீசிய பந்தில் ஷிகர் தவன் ஆட்டமிழந்தார். அவர் 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 46 ரன்களை எடுத்து வெளியேறினார். பின்னர் அம்பதி ராயுடு-தினேஷ் கார்த்திக் இணை சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ராயுடு , தினேஷ் கார்த்திக் இருவரும் தலா 31 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பழிதீர்த்தது இந்தியா: கடந்த 2017-இல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோற்றதற்கு தற்போது பாகிஸ்தானை பழிதீர்த்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com