சூப்பர் ஃபோர்: இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் பிரிவு ஆட்டத்தில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
சூப்பர் ஃபோர்: இந்தியா வெற்றி


ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் பிரிவு ஆட்டத்தில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. கேப்டன் ரோஹித் 83 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டை வீழ்த்தியும் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு துபையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பெளலிங்கை தேர்வு செய்தது. 
அதையடுத்து வங்கதேச வீரர்கள் லிட்டன் தாஸ், நஸ்முல் உசேன் களமிறங்கினர். தொடக்கமே அதிர்ச்சி தரும் வகையில் லிட்டன், நஸ்முல் ஆகியோர் தலா 7 ரன்களுக்கு புவனேஸ்வர், பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 
அவர்களுக்கு பின் வந்த ஷகிப் அல் ஹசன் 17, முஷ்பிகுர் ரஹ்மான் 21, மொகமது மிதுன் 9 ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
ஒரளவு நிலைத்து ஆடி ரன்களை சேர்த்து வந்த மமுத்துல்லா 25 ரன்கள் எடுத்திருந்தபோது, புவனேஸ்வர் பந்தில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து முஸ்தாக் உசேன் 12 ரன்களுக்கு ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது வங்கதேச அணி 33.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களையே எடுத்து திணறிக் கொண்டிருந்தது. பின்னர் இணை சேர்ந்த கேப்டன் மொர்டஸா, மெஹிதி ஹாசன் இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 2 சிக்ஸருடன் 26 ரன்களை எடுத்து மொர்டஸா வெளியேறினார். தலா 2 சிக்ஸர் பவுண்டரியுடன் 42 ரன்களை எடுத்த மெஹிதி, 3 ரன்களை எடுத்த முஸ்தபிஸுர் ரஹ்மன் ஆகியோர் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
ஜடேஜா அபாரம் 4 விக்கெட்: 
காயம் காரணமாக பாண்டியா விலகிய நிலையில் அணியில் சேர்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே போல் புவனேஸ்வர், பும்ரா ஆகியோரும் சிறப்பாக பந்து வீசி தலா 3-32, 3-37 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் 49.1ஓவர்களில் 173 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட்டானது.
இந்தியா வெற்றி: 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய தரப்பில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியதால் ரன் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.
இதனால் 10 -ஆவது ஓவரின் போது அணியின் ஸ்கோர் 50-ஐ எட்டியது. 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 40 ரன்களை எடுத்த தவன், ஷகிப் பந்தில் போல்டானார். அப்போது 15 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து இந்திய அணி 63 ரன்களை எடுத்திருந்தது. ராயுடு 13 ரன்களுடன் ருபேல் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் ரோஹித்-தோனி இணை சேர்ந்து அணியை வெறறிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் தோனி 33 ரன்களுக்கு மொர்டஸா பந்தில் ஆட்டமிழந்தார். 
ரோஹித் அபாரம் 83: 3 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 104 பந்துகளில் 83 ரன்களுடன் ரோஹித்தும், 1 ரன்னுடன் தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் 36.2 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 174 ரன்களை எடுத்து இந்திய அணி வென்றது. வங்கதேச தரப்பில் மொர்டஸா, முஸ்தபிஸுர், ருபேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com