வியாபாரமாகி விட்ட விளையாட்டு விருதுகள்: அதிருப்தியில் வீரர்கள், பயிற்சியாளர்கள்

மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் அர்ஜூனா, துரோணாச்சார்யா, கேல்ரத்னா விருதுகள், ஊதியத்திற்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கும், ஒலிம்பிக்கில் இடம்பெறாத விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும்

மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் அர்ஜூனா, துரோணாச்சார்யா, கேல்ரத்னா விருதுகள், ஊதியத்திற்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கும், ஒலிம்பிக்கில் இடம்பெறாத விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் வழங்கப்படுவது, சாதனை நிகழ்த்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, தயான் சந்த் விருது வழங்கப்படுகிறது. அதேபோல், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு 20 பேர், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இருவர், துரோணாச்சார்யா விருதுக்கு 8 பேர் என விருதுக்கான வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த சூழலில், விருதுக்கான வீரர்களை பரிந்துரை செய்வதில் பாரபட்சத்துடன் செயல்படுவதாக தேர்வுக்கு குழுவினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 எதிர்ப்பு: இதுதொடர்பாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வில்வித்தை பயிற்சியாளர் ஜீவன்ஜோத் சிங் ஆகியோர் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பணத்திற்காக விளையாடும் வீரர்களுக்கும், ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறாத சில விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்படுவது, விளையாட்டு வீரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் குத்துச் சண்டை வீரரும், அர்ஜூனா விருதுக்கான தேர்வுக்குழுவில் 2 முறை இடம்பெற்றிருந்தவருமான வி.தேவராஜன் கூறியதாவது:
 விருதுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு புள்ளிகள் நிர்ணயிக்கப்படுவதில் பாரபட்சம் உள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகளை மீறி, விருதுக்கான தேர்வு குழுவில் இடம் பெறும் சிறந்த விளையாட்டு வீரர்கள் கூட தங்கள் கருத்துகளை முன் வைக்க முடியாது.
 திறமையின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய வீரர்கள், தனிநபர்களின் ஆதிக்கம், பெயர், புகழ், பணத்தின் மூலமாகவே ஒவ்வொரு ஆண்டும் விருதுக்கான பட்டியலில் இடம் பெறும் சூழல் உள்ளது. ஊதியத்திற்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள் வழங்குவதை தடை செய்ய வேண்டும்.
 நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறும் சில வீரர்கள், அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதில்லை. இதனாலேயே, திறமையான வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய விருதுகள், பிரபலமானவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து கிடைத்து வருகிறது.
 விருதுக்கு தகுதியான வீரர்களாக இருக்கும்பட்சத்தில், அந்தந்த மாநில அரசுகளும் மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு அந்த வீரர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com