நேர்த்தியான பெளலிங்: ரோஹித் சர்மா பாராட்டு

ஆசிய கோப்பை போட்டியில் இந்திய பெளலர்கள் நேர்த்தியாகவும், நிலைத்த தன்மையுடனும் பந்துவீசினர் என கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
நேர்த்தியான பெளலிங்: ரோஹித் சர்மா பாராட்டு


ஆசிய கோப்பை போட்டியில் இந்திய பெளலர்கள் நேர்த்தியாகவும், நிலைத்த தன்மையுடனும் பந்துவீசினர் என கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
வங்கதேசம், பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் ஆட்டங்களில் வென்று இறுதிச் சுற்று வாய்ப்பை உறுதி செய்த நிலையில் திங்கள்கிழமை ரோஹித் கூறியதாவது:
எதிரணிகளின் ரன் குவிப்பை மட்டுப்படுத்தும் வகையில் நமது பெளலர்களின் பந்து வீச்சு நேர்த்தியாக அமைந்தது. பாகிஸ்தானை 237, வங்கதேசத்தை 173 ரன்களிலும் கட்டுப்படுத்தினர். ஒட்டுமொத்த பெளலிங் பிரிவுக்கும் எனது பாராட்டுகள். தொடர்ந்து நிலைத்த தன்மையுடன் பந்துவீசி வருகின்றனர். வெற்றிக்கான பெருமை அவர்களையே சாரும். 
பும்ரா மிகவும் அபாயகரமாக பந்துவீசி வருகிறார். புவனேஸ்வர், பும்ரா இணை தொடக்க ஓவர்களில் எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்கின்றனர். 4 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் உத்தி வெற்றி பெற்றுளளது. ஹார்திக் பாண்டியா காயமடைந்த நிலையில் துபை போன்ற ஆடுகளங்களில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 4 சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஷிகர் தவன் ஆட்டம் குறித்து எதுவும் கூறத்தேவையில்லை. பல ஆட்டங்களில் இணைந்து ஆடியுள்ளதால், ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துள்ளோம். நானும் பேட்டிங்கை மேம்படுத்த தீவிர பயிற்சி மேற்கொண்டேன். குறிப்பாக சிக்ஸர் அடிப்பதற்கான ஷாட்களுக்கு தனி பயிற்சி பெற்றேன் என்றார்.
தவன் கூறுகையில்: 50 ரன்களில் இருந்து 100 ரன்களாக மாற்றும் உத்தியை ரோஹித்திடம் இருந்து கற்றுக் கொண்டேன். முதல் 10 ஓவர்கள் வரை இருவரும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டோம். முதல் 20 ஓவர்கள் வரை ஆடினால் பின்னர் அனைத்தையும் எளிதாக எதிர்கொள்ள முடியும். என்னுடைய ஷாட்கள் சீராக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன் என்றார்.
பாக்.கேப்டன் சர்ஃப்ராஸ் கூறுகையில்:
ரோஹித் சர்மாவின் 2 கேட்ச்களை தவறவிட்டது கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. கேட்ச் பிடித்திருந்தால், ஆட்டத்தின் போக்கு சிறிது மாறியிருக்கும். பிட்சும் மதிய வேளையில் விரிசல்களுடன் கடினமாகி விட்டது. துவக்கத்திலேயே விக்கெட் வீழ்த்த முடியவில்லை. நாங்கள் எங்கள் விக்கெட்டுகளை முதலிலேயே பறிகொடுத்து விட்டோம். இந்திய துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினர் என்றார்.

ஆப்கன்-இந்தியா இன்று மோதல்
சூப்பர் ஃபோர் பிரிவின் கடைசி ஆட்டத்தில் இந்தியா செவ்வாய்க்கிழமை ஆப்கன் அணியுடன் மோதுகிறது. ஏற்கெனவே இரு வெற்றிகளுடன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி இந்த ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com