அபாரமான ஃபார்மில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!

சிஎஸ்கேவின் முக்கிய வீரர்கள் கடந்த இரு நாள்களில் அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்கள்... 
அபாரமான ஃபார்மில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!

2019 ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள இந்த மார்ச் மாதம் (23) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு மிகவும் நல்லவிதமாகத் தொடங்கியுள்ளது. இதன்மூலம்  சிஎஸ்கே நிர்வாகமும் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

தோனி, முரளி விஜய், ஜாதவ், இம்ரான் தாஹிர், என்ஜிடி, டுபிளெஸ்ஸிஸ் என சிஎஸ்கேவின் முக்கிய வீரர்கள் கடந்த இரு நாள்களில் அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

இந்த வருட ஐபிஎல் போட்டி மார்ச் 23 அன்று தொடங்கவுள்ளது. மார்ச் 23-ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் தொடங்க இரு வாரங்களே உள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் நல்ல ஃபார்மை எட்டியுள்ளார்கள்.

சூரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மேஹாலயா அணிக்கு எதிராக தமிழக அணியின் முரளி விஜய் சதமடித்தார். 67 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்த முரளி விஜய், தமிழக வீரர்களில் டி20 சதமடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். மேலும் அவர் கடைசி 3 ஆட்டங்களில் ஒரு சதமும் இரு அரை சதங்களும் அடித்துள்ளார். இதனால் இந்த வருடம் சிஎஸ்கே ஆட்டங்களில் முரளி விஜய் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, தோனிக்கும் ஜாதவுக்கு அற்புதமான நாளாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய ஆஸி. அணி 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 240/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி-கேதார் ஜாதவ் இணை சிறப்பாக ஆடி அரைசதங்களுடன் வெற்றிக்கு வித்திட்டது. 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 72 பந்துகளில் 59 ரன்களுடன் தோனியும், 1 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 87 பந்துகளில் 81 ரன்களுடன் கேதார் ஜாதவும் இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். ஐபிஎல் நெருங்கும் சமயத்தில் சிஎஸ்கே அணியின் பின்வரிசை வீரர்களான தோனியும் ஜாதவும் நல்ல ஃபார்மை எட்டியியுள்ளார்கள்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டம் சிஎஸ்கே வீரர்களான என்ஜிடி, இம்ரான் தாஹிர், டு பிளெஸ்ஸிஸ் ஆகியோருக்கு பிரமாதமாக அமைந்தது.  தாஹிர், என்ஜிடி ஆகிய இருவருமே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி 231 ரன்கள் மட்டுமே எடுக்க முக்கியக் காரணமாக அமைந்தார்கள். இதன்பிறகு இலக்கை விரட்டியபோது, டுபிளெஸ்ஸிஸ் 112 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த மூவருமே சிஎஸ்கே ஆட்டங்களில் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் நல்ல ஃபார்முடன் ஐபிஎல் போட்டிக்குள் நுழைய உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com