"தமிழால் எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்...' விருது பெற்ற தமிழறிஞர்கள் மகிழ்ச்சி - Dinamani - Tamil Daily News

"தமிழால் எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்...' விருது பெற்ற தமிழறிஞர்கள் மகிழ்ச்சி

First Published : 12 April 2013 02:02 AM IST


தமிழால் தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததாக தமிழக அரசின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ம.வே.பசுபதி (கபிலர் விருது): 70 வயதைக் கடந்து விட்ட போதிலும், ஓலைச் சுவடிகள், அரிய கையெழுத்துப் படிகள் ஆகியவற்றை தொகுப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறேன். கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் எனது சொந்த ஊர். அங்குள்ள காசிமடம் நடத்தும் கல்லூரியில் புலவர் எம்.ஏ., பட்டம் படித்து, அதன்பின், அந்தக் கல்லூரியிலேயே விரிவுரையாளர், பேராசிரியர் மற்றும் முதல்வர் என்ற நிலைக்கு உயர்ந்தேன்.

கடந்த 2000-ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்றறேன். காசி மடத்தின் கல்லூரியில் இருந்த பழம்பெரும் ஓலைச் சுவடிகள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்திடம் ஒப்படைக்கப்பட்டாலும், ஓலைச் சுவடிகள் மீதுள்ள ஆர்வம் பணி ஓய்வுக்குப் பிறகும் குறையவில்லை.

பணி ஓய்வுக்குப் பிறகு, 2002-ஆம் ஆண்டில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள உ.வே.சா., நூலகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். அங்கு நூலகக் காப்பாட்சியராகப் பொறுப்பு வகித்தேன்.

அப்போது, பழம்பெரும் ஓலைச் சுவடிகளை நூல்களாகத் தொகுக்கும் பணியில் தீவிரம் காட்டினேன். அதில், பணவிடுதூது தொடர்பான ஓலைச் சுவடிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டேன். இது, நாணயவியல் ஆராய்ச்சிக்கு பெரும் உதவி செய்து வருகிறது.

பதிப்புகள், உரைநடை நூல்கள் என இதுவரை 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், தொகுத்தும் உள்ளேன்.

இப்போது, கம்பன் கதை என்ற நூலை எழுதும் பணியில் தீவிரம் காட்டி வருகிறேன். எழுபது வயதிலும் நான் ஆற்றி வரும் தமிழ்ப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாக அரசு விருதினை கருதுகிறேன்.

கவிஞர் முத்துலிங்கம்: சிவகங்கை மாவட்டம், கடம்பங்குடி கிராமம் எனது சொந்த ஊர். பத்திரிகைத் துறையில் நுழைந்து, திரைத்துறை மற்றும் அரசியலில் கால் பதித்தேன். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தேன். 1984-ஆம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராகவும், 1987-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் பணியாற்றினேன். 1500-க்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியுள்ளேன்.

இதில் 250-க்கும் அதிகமான பாடல்கள் இன்றளவிலும் பிரபலமாக விளங்குகிறது.

காற்றில் விதைத்த கருத்து, பாடல் பிறந்த கதை, உலா போகும் ஓடங்கள் உள்ளிட்ட 12 புத்தகங்களை எழுதியுள்ளேன். திரைப்பட பாடல்களுக்காக இரண்டு முறை தமிழக அரசின் விருதை பெற்றுள்ளேன். இதைத்தவிர கலைமாமணி விருது, பாவேந்தர் பாரதிதாசனர் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளேன்.

பால. இரமணி (கம்பர் விருது): சிதம்பரம் வட்டம் கீழ மூங்கிலடி கிராமம் எனது சொந்த ஊர். சொந்த மாவட்டத்தில் பள்ளிப் படிப்பைப் முடித்து, சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தேன்.

இதன்பின், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய வானொலி தில்லியில் ஆறு ஆண்டுகளும், நாகபுரி, புதுச்சேரி தூர்தர்ஷனில் பணியாற்றினேன். இப்போது, சென்னையில் மூத்த நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாக உள்ளேன். சிறுவயதிலேயே கம்பராமாயணத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால், அதில் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டேன். இதுவரை, 28 நூல்களை எழுதியுள்ளேன்.

முனைவர் ம.லோகநாயகி: சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன்.

இதுவரை, எட்டு நூல்களையும், 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.

கவி முரசு, கவித் தென்றல் உள்பட 5 விருதுகளைப் பெற்றுள்ளேன். பார்வையற்றோருக்காக எண்ணற்ற கருத்தரங்குகளை நடத்தியுள்ளேன். பட்டிமன்றச் சொற்பொழிவாளராக உள்ளேன்.

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.